செய்தியாளர்: துர்கா தேவி ச ஈரானிய பெண்கள் மோட்டார் வாகனங்களை ஓட்ட எந்த விதமான சட்டத் தடையும் இல்லை. இருப்பினும், நடைமுறையில் அதிகாரிகள் உரிமம் வழங்க மறுத்து வந்தனர். கடந்த ஜனவரி மாதம், பெண்கள் உரிமம் பெறுவதற்கான தீர்மானத்தை ஈரான் அமைச்சரவை அங்கீகரித்தது. ஆனால், அது நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்துவந்தது. உரிமம் இல்லாததால், பெண்களால் முறையான ஓட்டுநர் பயிற்சி பெற முடியவில்லை. விபத்து ஏற்பட்டால்கூட எந்தவிதமான காப்பீட்டுப் பாதுகாப்பும் கிடைக்காமல் இருந்தது. விபத்தில் பெண்களே பாதிக்கப்பட்ட நிலையிலும், சட்டப்படி அவர்கள் மீதே குற்றம் சுமத்தப்பட்டது வழக்கமாக இருந்துவந்தது. இருப்பினும், ஈரானில் பெண்கள் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணிப்பதற்கு அனுமதி உண்டு. ஈரானில் பெண்கள் மோட்டார் வாகனம் ஓட்டுவதற்குச் சவாலாக இருப்பது அவர்களின் ஆடை விதிகளே. 1979-இல் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பின், ஈரானியப் பெண்கள் பல சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த ஆடை விதிகளின்படி, பொதுவெளியில் முக்காடு அணிதல், கண்ணியமான தளர்வான ஆடை அணிதல் ஆகியன கட்டாயமாக இருந்தது. எனினும், சமீப ஆண்டுகளில் பலரும் அந்த விதிகளை மீறி வந்துள்ளனர். 2022-இல் ஆடை விதியை மீறியதாகக் கைது செய்யப்பட்ட மஹ்சா அமீனி என்ற இளம் பெண், காவலில் இறந்த சம்பவம், சுதந்திரங்களைக் கோரி ஈரான் முழுவதும் பெண்களைப் போராட்டத்தில் இறங்கத் தூண்டியது. அதன் பிறகு, மோட்டார் சைக்கிள் ஓட்டும் பெண்கள் ஆடை விதிகளை வேகமாக மீறி வந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரானிய அமைச்சரவை தீர்மானத்தில், பெண் விண்ணப்பதாரர்களுக்கு நடைமுறைப் பயிற்சி அளித்தல், காவல்துறையின் நேரடி மேற்பார்வையில் தேர்வு நடத்துதல் மற்றும் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் வழங்குதல் ஆகியவற்றை போக்குவரத்துக் காவல்துறை கட்டாயமாகச் செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. இதனால் கடந்த மாதங்களில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஓட்டும் ஈரானிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரியில் பெண்கள் உரிமம் பெறுவதற்கு அரசு ஒரு தீர்மானத்தை அங்கீகரித்தபோதிலும், அது இதுவரை நடைமுறைப்படுத்தாமலும் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. "பெண்கள் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணிக்க அனுமதி உண்டு" என்கிறார் ஈரானின் பெண்கள் மற்றும் குடும்ப நலத் துணை அதிபர் ஜஹ்ரா பெஹ்ரூஸ்-அஸர். "'நீங்களே ஓட்டக் கூடாது, ஆனால் அது கணவனோ நெருங்கிய ஆண் உறவினரோ என்று பாராமல் வேறொருவருக்குப் பின்னால் அமரலாம் என்று சொல்வது தவறானது" என அவர் சுட்டிக்காட்டுகிறார். "இது தெளிவான இரட்டை நிலைப்பாடு" என்றும் அவர் கூறுகிறார். ஈரானில் பெண்களுக்கு, மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரம் உலக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஈரான் | மோட்டார் சைக்கிள் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. பின்னணியில் ஒரு போராட்டம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk