தமிழகத்தில் எழுத்தாளர்களைக் கண்டுகொள்ளவில்லை, சினிமாகாரர்களைக் கொண்டாடுகின்றனர். அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள், தங்கள் காலடியில் இருக்கும் மண்ணையும் அதில் வாழும் மக்களையும் மையமாகக் கொண்டு எழுத வேண்டும்; எழுத்தாளர் பொன்னீலன் எழுத்தாளர் பொன்னீலன் மற்றும் நேர்காணல் செய்த கமல செல்வராஜ் கல்லூரிப் பருவத்திலிருந்து, கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, ஆய்வு என எழுதத் தொடங்கி, இன்று, சுமார் 45 நூல்களுக்குச் சொந்தக்காரராக, சாகித்ய அகாடமி விருதுடன் எழுத்துலகின் ஜாம்பவனாகத் தடம் பதித்துள்ளவர் பொன்னீலன் என்னும் நீலகண்டேஸ்வர பக்தவச்சலம். கன்னியாகுமரி மாவட்டம், மணிக்கட்டிப்பொட்டல் என்னும் குக்கிராமத்தில் பிறந்து, பள்ளி ஆசிரியராகத் தமது பணியைத் தொடங்கி, கல்வித்துறையின் முதன்மை கல்வி அதிகாரி என்னும் நிலைக்கு உயர்ந்தவர் பொன்னீலன். எழுத்தாளர், பேச்சாளர், பண்பாளர், பழகுவதற்கு இனிமையானவர், இளம் படைப்பாளர்களை ஊக்குவிப்பவர், வெள்ளை உள்ளத்திற்குச் சொந்தக்காரர் போன்ற அடையாளங்களைக் கொண்டவர். இதனால், இவரின் பெயருக்கு முன் ‘அண்ணாச்சி’ என்னும் சொல் இயல்பாகவே சேர்ந்து கொண்டது. அதனால், ‘அண்ணாச்சி’ பொன்னீலன் என்றே அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். அவரை, நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய போது, வெளிப்படுத்திய உணர்வுகளின் பிரதிபலிப்பு இதோ:- கேள்வி: நீங்கள் முதன்முதலில் எழுத்துத் துறைக்குள் வந்தது எப்படி? பதில்: சிறுவயதிலிருந்து எனது மனதில் சந்தோஷமோ, துன்பமோ ஏற்பட்டால் அதைப்பதிவு செய்வது வழக்கம். அதற்குத் துணையாக இருந்தவர் ஆசிரியர் தாணுமாலையப்பெருமாள். அவர்தான் தினமும் நாட்குறிப்பு எழுத வேண்டும் என வலியுறுத்தியவர். அப்படிதான் எழுதுவதற்குத் தொடங்கினேன். கேள்வி: அதன் பிறகு, எழுத்தின் பரிணாம வளர்ச்சி எப்படி உருவானது? பதில்: நான் பிறந்த ஊர் ஒரு சின்ன கிராமம். அங்கே ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தில் தான் தினமும் குளிப்பது வழக்கம். அந்தக் குளத்தில் நிறைய பூக்கள் பூத்திருக்கும். அவற்றை பறித்து உறவினர்களுக்குக் கொடுப்பேன். ஒரு நாள், பூப்பறித்த போது, ஒருவர், என்னிடம், குளத்தில் உள்ளப் பூக்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும், இனி, பூப்பறிக்கக் கூடாது என்றும் கூறினார். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து ‘பூப்பறிப்பு’ என்னும் கதை எழுதினேன். அது முதன்முதலில் தினமணியில் பிரசுரமானது. அதன் பிறகுத் தொடர்ந்து இந்நாள்வரை எழுதிக் கொண்டேயிருக்கிறேன். கேள்வி: ஓர் எழுத்தாளர், எழுத்துத்துறையில் வெற்றி பெறுவதற்கு, ஏதேனும் இயக்கத்தைச் சார்ந்து இருக்க வேண்டுமா? இல்லை எந்த இயக்கத்தையும் சாராமல் இருந்து எழுத வேண்டுமா? பதில்: இயக்கத்தைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதுமில்லை, சாராமல் இருக்க வேண்டும் என்பதுமில்லை. எழுத்தாளர் வெற்றி பெறுவதற்கு, அவரது எழுத்தில் அறிவு, அறம், அழகு இவை மூன்றும் இருந்தால் போதுமானது. கேள்வி: நீங்கள் சிறுகதை எழுத்திலிருந்து எப்படி நாவல் எழுதுவதற்குத் தொடங்கினீர்கள்? பதில்: நான் குமரி மாவட்டத்திலிருந்து, நாகலாபுரத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டேன். அது, ஒரு வெட்டவெளியான இடமாக இருந்தது. அந்த இடத்தில் கிடைத்த அனுபவத்தை வைத்து ‘கரிசல்’ என்னும் நாவலை எழுதினேன். அதுதான், எனது முதல் நாவல். கேள்வி: நீங்கள், ஆரம்பத்தில் ஓர் ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, பின்பு கல்வித்துறையின் முதன்மை கல்வி அலுவலர் பதவி வரை உயர்ந்துள்ளீர். அரசுப் பணியையும், எழுத்துப் பணியையும் எப்படி உங்களால் சமநிலையில் செய்ய முடிந்தது? பதில்: எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு, ஆசிரியர் பணி. அப்பணியில், காலையிலும் மாலையிலும் நிறைய ஓய்வு நேரம் கிடைக்கும். அந்த நேரத்தை வீணாக்காமல், எழுதிக் கொண்டேயிருப்பேன். அதனால்தான், எழுத்துத்துறையில், என்னால் சாதிக்க முடிந்தது. கேள்வி: எழுத்துலகில் நீங்கள் அடைந்திருக்கும் வெற்றி எதை மையமாகக் கொண்டது? பதில்: நாடு சுதந்திரம் பெற்ற 1950 இல் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். எனது எழுத்துகளில், அடித்தள மக்களின் போராட்டங்களும், அவற்றின் அனுபவங்களும் பிரதிபலிக்கும். அதோடு, மக்களின் பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கூறுகளை மையமாகக் கொண்டே எழுதி வருகிறேன். அதுவே, எனது எழுத்துலக வெற்றி என்று கருதுகிறேன். கேள்வி: உங்கள் குடும்பத்தில், உங்களின் அம்மா, நீங்கள், உங்களின் இரண்டு பெண் குழந்தையர்கள், அவர்களின் இரண்டு பெண் பிள்ளையர் என நான்கு தலைமுறையினர் தொடர்ந்து படைப்பாளர்களாக உள்ளனர். இதன் காரணம் என்று கருதுகிறீர்கள்? பதில்: இது, அவர்கள் என்மீது கொண்டிருக்கும் அன்பு என்றே கருதுகிறேன். அதனால்தான், எனது மூத்த பேத்தி, ‘கரிசல்’ நாவலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்துள்ளாள். அதோடு, தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறாள். இது, எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. கேள்வி: உங்களின் படைப்புகள் மீது பலர் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அந்தப் படைப்புகள் தரமானவையாக உள்ளனவா? பதில்: ஆய்வுகள் அனைத்தும் பட்டத்திற்காக மட்டும் செய்யப்படுகின்றன. அவை, புத்தகங்களாக வெளிவருவதில்லை. காரணம் அவை, தரமானவையாக இல்லை. எனது, படைப்புகள் பற்றிய ஆய்வில், ஓர் ஆய்வேடு மட்டும் நூலாக வெளிவந்துள்ளது. என்னிடம் 9 ஆய்வேடுகள் உள்ளன. அவை, நூலாக்கப்படவில்லை. ஆய்வு தரமானதாக அமைய, ஆய்வாளர், படைப்பை உணர்ந்து, படைப்பாளியை புரிந்து, எழுத வேண்டும். கேள்வி: நீங்கள் இலக்கியம் சார்ந்து பல நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறீர்கள். அங்குள்ள இலக்கியங்கள் எப்படி இருக்கின்றன, இலக்கியவாதிகள் எப்படி கௌரவிக்கப்படுகின்றனர்? பதில்: நான், டென்மார்க், சோவியத் யூனியன் போன்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்கே நம் நாட்டிலுள்ள இலக்கியங்கள் பலவற்றை, அவர்களின் மொழியில், மொழிபெயர்த்துள்ளனர். சோவியத் யூனியனில் எனது நூல்கள் பலவற்றை அவர்களின் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்கள். அங்குள்ள கல்லூரி, பல்கலைக் கழகங்களில் என்னை அழைத்துக் கௌரவித்தார்கள். அங்கு, எனக்குக் கிடைத்தக் கௌரவம் வேறு எங்கும், எனக்குக் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன். கேள்வி: இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்திய அகாடமி விருதை நீங்கள் பெற்றுள்ளீர்கள். மட்டுமின்றி அதன் தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் நீங்கள் இருந்துள்ளீர்கள். இந்தத் தேர்வுக் குழுவின் செயல்பாடு அப்போதிலிருந்து இப்போது வரை எப்படி உள்ளது? பதில்: ஏழு பேர் அடங்கிய ஒரு குழுவினர் தான், அவ்விருதுக்குரிய நூலை தேர்ந்தெடுப்பர். அவர்களிடையே பெரிய விவாதங்களும் உட்பூசல்களும் போட்டியும் உருவாகும். அதன் பிறகு ஒத்தொருமித்தக் கருத்துடன் தரமான நூல்களை மட்டுமே தேர்வு செய்வார்கள். அது, அன்றும் அப்படித்தான் நடந்தது. இன்றும் அதுபோலவே நடக்கிறது. கேள்வி: சாகித்ய அகாடமி விருதுக்கு அடுத்தபடியாக, இலக்கியத்திற்கு மிக உயரிய விருதாக ஞானபீட விருது வழங்கப்படுகிறது. அவ்விருது, இன்னும் உங்களுக்கு வழங்கப்படவில்லை. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: அது, அந்தக் கமிட்டியின் முடிவு. அவர்களுக்கு, நான் எழுதுவது விருப்பமாக இருந்திருந்தால் தந்திருப்பார்கள். விருப்பமில்லாததால் தரவில்லை. அதற்காக அவர்களை, நான் குறைகூறுவதற்கு விரும்பவில்லை. கேள்வி: இப்பொழுது கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கியுள்ளனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: வைரமுத்து உலகறிந்த மிகச் சிறந்த ஒரு கவிஞர். அவருக்குக் கொடுத்தது நியாயம் என்றே கருதுகிறேன். கேள்வி: உங்களுடைய அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் எப்படி வரவேண்டும், எதை மையமாகக் கொண்டு எழுத வேண்டும் என நினைக்கிறீர்கள்? பதில்: அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள், தங்கள் காலடியில் இருக்கும் மண்ணையும் அதில் வாழும் மக்களையும் மையமாகக் கொண்டு எழுத வேண்டும். அவர்கள் வாழும் நாட்டை, மக்களை, மொழியை நேசித்து எழுத வேண்டும். அதுவே சிறந்த எழுத்தாக மாறும். கேள்வி: உங்களின், ஆரம்பக்கால எழுத்திலிருந்து, தற்போது வரை உள்ள எழுத்தின் நீக்கும் போக்கும் எப்படி உள்ளது? பதில்: ஆரம்பத்தில் நான் மண்ணையும் மக்களையும் சார்ந்து எழுதினேன். தற்பொழுது, வயது முதிர்வின் காரணமாகத் தத்துவம் சார்ந்து எழுதி வருகிறேன். கேள்வி: நீங்கள், எழுதத் தொடங்கியக் காலத்தில் இடதுசாரி சிந்தனையோடு எழுதி வந்தீர்கள். இப்பொழுதும் அதே சிந்தனையோடு எழுதுகிறீர்களா? இல்லை, இடையில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா? பதில்: நான், இடதுசாரியுமில்லை, வலதுசாரியுமில்லை. நான், ஒரு மார்க்சீயவாதி. மார்க்சீயம் என்பது முன்னோக்கிச் செல்லும் கருத்து, சிந்தனை, முன்னோக்கிச் செல்லத் தூண்டும் அளவுகோல், நேற்றும், இன்றும், நாளையும் அதை மையமாகக் கொண்டு தான் எழுதினேன், எழுதுவேன். அதில் எந்த மாற்றமுமில்லை. கேள்வி: உங்களின் படைப்புகளில் சில திரைப்படமாக்கப்பட்டுள்ளன. அவை, உங்கள் படைப்பின் கருவை சிதைக்காமல் எடுக்கப்பட்டுள்ளனவா? இல்லை சில மாற்றங்கள் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளனவா? பதில்: எனது படைப்புகள், திரைப்படமாக எடுத்திருப்பது சந்தோஷம். ஆனால், அவர்கள், என் உள்ளுணர்வை உணர்ந்து திரைப்படமாக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது. அப்படி, செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். கேள்வி: தமிழத்தில் இலக்கியவாதிகள் அல்லது எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதைக் கிடைக்கிறதா? அல்லது அவர்களுக்கு எவ்விதமான கௌரவம் கொடுக்க வேண்டும்? பதில்: இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கேரளாவில் எழுத்தாளர்களுக்கு அதிக மரியாதைக் கொடுக்கின்றனர். நான், கேரளத்தில் இருந்திருந்தால் என்னை கொண்டாடியிருப்பர். ஆனால் தமிழகத்தில் சினிமாவுக்கு அதிக மரியாதை கொடுக்கின்றனர். எழுத்தாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எதிர்காலத்தில் இந்த நிலைமாற வேண்டும், அதற்காக எழுத்தாளர்கள் முயற்சிக்க வேண்டும். கண்டிப்பாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு எழுத்தாளர் பொன்னீலன், தமது உள்ளார்ந்த கருத்துக்களை ஒளிவுமறைவின்றி வெட்டென வெளிப்படுத்தியுள்ளார். நேர்காணல்: முனைவர் கமல. செல்வராஜ் எழுத்தாளர், அருமனை. அழைக்க: 9443559841 அணுக: drkamalaru@gmail.com Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தமிழகத்தில் சினிமாவுக்கு மரியாதை; கேரளாவில் இருந்தால் என்னை கொண்டாடி இருப்பார்கள்: எழுத்தாளர் பொன்னீலன் பேட்டி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk