பட மூலாதாரம், Getty Images இந்திய தேர்தல் ஆணையத்துக்குள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக, 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து இந்திய அரசியலில் இதுகுறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அண்மையில் தான் நடைபெற்ற நிலையில், இந்த விவகாரம் மாநில அரசியல் சூழலிலும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. எனினும், ஆளும் கட்சியான தவெகவிலிருந்து அதிகாரபூர்வ கருத்து வெளியாகவில்லை. "தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன; ஆனால், 'துடிப்பான ஜனநாயகம்' ஒன்றில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது மிகவும் இயல்பான ஒன்று" என்று ஆளும் பாஜக தரப்பு கூறுகிறது. தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது முடிவெடுக்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், MKS/X வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த பத்து மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த விவகாரம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. "தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது; உடனடியாக அவர் நீக்கப்பட வேண்டும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதன்கிழமை தன் எக்ஸ் பக்கத்தில், வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின்போது வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். End of அதிகம் படிக்கப்பட்டது "தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது சாதாரண நிர்வாகக் கருத்து வேறுபாடாகக் கருத முடியாது" என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி நடவடிக்கைகளுக்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும் கேள்விகள் எழுவதாக அவர் கூறியுள்ளார். இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற நடவடிக்கைகள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பட மூலாதாரம், Djofficial/X இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார், "தேர்தல் ஆணையர்கள் எழுப்பிய ஆட்சேபனைகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறினார். "இரண்டு தேர்தல் ஆணையர்களும் பத்து மாதங்களில் 14 கடிதங்கள் எழுதி தங்களது கருத்து வேறுபாட்டைத் தெரிவித்திருப்பது கவலைக்குரிய விஷயம். மாநில சட்டப்பேரவைகளுக்கும் நாடாளுமன்றத்துக்கும் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. இந்தச் சூழலில் இத்தகைய புகார்கள் வருவது வருத்தமளிக்கிறது. உண்மை என்ன என்பதைத் தெளிவுபடுத்த சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று அவர் கூறினார். நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தியும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார். இந்திய ஜனநாயக நாட்டில் தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பாக இத்தகைய புகார்கள் எழுவது நாட்டுக்கே அவமானம் என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இடதுசாரிக் கட்சிகளும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. வாக்காளர் பதிவு, பெயர் நீக்கம் மற்றும் பெயர் மீண்டும் சேர்த்தல் உள்ளிட்ட விவகாரங்களில் இரண்டு தேர்தல் ஆணையர்கள் குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளைப் பதிவு செய்திருப்பது முக்கியமான கேள்விகளை எழுப்புவதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் தவறாக நீக்கப்பட்டவர்களின் வாக்குரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இடதுசாரிக் கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன. "தேர்தல் ஆணையத்தின் இரண்டு உறுப்பினர்கள் தங்களுக்குத் தெரியாமல் அல்லது தங்களது ஒப்புதல் இல்லாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஆட்சேபனை தெரிவித்திருப்பது கவலைக்குரியது " என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளைக் கருத்தில் கொண்டு, இந்தப் பணியை நிறுத்த வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அரசியலமைப்பு ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவருக்கு திருமாவளன் கடிதம் எழுதியுள்ளார். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாவும் சமூக வலைதள பதிவில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையரின் தனிப்பட்ட அலுவலகம் அல்ல என்றும், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சாசன அமைப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையுடன் செயல்பட முடியாது என்றும், அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு தேர்தல் ஆணையர்கள் விவகாரத்தில் ஸ்டாலினின் கருத்தை பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி சமூக வலைதள பதிவில் விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களுக்கும் அலுவலகக் குறிப்புகள், கேள்விகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பதிவு செய்ய உரிமை உள்ளது என்றும், கருத்து வேறுபாடு ஏற்பட்டால் சட்டப்படி பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளும் தேர்தல் ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளே என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ள நிலையில், உள்நாட்டு விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் பேசுவதாக நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். "வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் பெயர் நீக்கப்பட்டவர்கள் தொடர்பான கோரிக்கைகள், ஆட்சேபனைகள் மற்றும் மேல்முறையீடுகள் இன்னும் நடைமுறையில் இருப்பதால், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டது இறுதி முடிவு அல்ல" என்றும் அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம், Getty Images செப்டம்பர் 23-ஆம் தேதி வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, "தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த பத்து மாதங்களில் குறைந்தது 14 முறை, வாக்காளர் பதிவு, பெயர் நீக்கம் மற்றும் மீண்டும் சேர்த்தல், வாக்காளர் பட்டியல் தரவைக் கையாளுதல் உள்ளிட்ட முடிவுகள் தொடர்பாக ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளனர்." என்று தெரிவித்துள்ளது. "புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான படிவம் 6-ல் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி தொடர்பான கேள்வி ஒன்று சேர்க்கப்பட்டதற்கும் இரு தேர்தல் ஆணையர்களும் ஆட்சேபனை தெரிவித்தனர்" என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "வாக்காளர் பட்டியலின் மின்னணு தரவுதளம் மத்திய அளவில் குவிக்கப்படுவது, மாநில மற்றும் தொகுதி அளவில் சட்டப்படி அதிகாரம் பெற்ற தேர்தல் பதிவு அலுவலர்களின் அணுகல் குறைக்கப்படுவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்ததாக" அந்தச் செய்தி கூறுகிறது. கோவாவில் தகுதியானவர்கள் என்று தேர்தல் பதிவு அலுவலர்கள் முடிவு செய்த 97 பேரின் பெயர்களை மென்பொருளில் பதிவு செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உள்நடவடிக்கைகள் குறித்து எழுந்துள்ள இந்தக் கேள்விகளுக்கு, தேர்தல் ஆணையம் வேறுபட்ட விளக்கத்தை அளித்துள்ளது. தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது முடிவெடுக்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும், கடந்த ஓராண்டில் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி உள்ளிட்ட அனைத்து முக்கிய முடிவுகளும் முழு ஆணையத்தின் ஒருமித்த ஒப்புதலுடன்தான் எடுக்கப்பட்டன என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
தமிழ்நாட்டில் எதிரொலித்த தேர்தல் ஆணைய விவகாரம்: ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கூறுவது என்ன?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk