பட மூலாதாரம், Hameed Ali கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கோட்டப்புழா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தைப் போலவே மழையே பெய்யாத இடத்தில் வந்த திடீர் வெள்ளத்தில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது, கேரள ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. நீலகிரியில் பெய்த மழையால் அந்த ஆற்றில் திடீர் வெள்ளம் வந்ததாக பிபிசியிடம் விளக்கிய கேரளத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஹமீது அலி, புவியியல் அமைப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார். ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அந்தப் பகுதிக்கு அதிக மக்கள் வருவது வழக்கமாகிவிட்டதாக வெள்ளத்தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் மஜீத் பிபிசியிடம் கூறினார். உள்ளூர் மக்களுக்கே இந்த திடீர் வெள்ளம் பற்றித் தெரியாததால்தான், பலரும் உயிரிழக்க வேண்டியதாகிவிட்டதாக அவர் தகவல் பகிர்ந்தார். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த கேரள முதல்வர் சதீசன், இது எதிர்பாராத இயற்கைப் பேரிடர் என்பதால் முன் கூட்டியே பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு செய்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதாக விளக்கியுள்ளார். பட மூலாதாரம், Hameed Ali கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் நிலம்பூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள சோகாடு–அமரம்பலம் ஆகிய கிராம ஊராட்சிகளின் எல்லைப்பகுதியில் கோட்டப்புழா ஆறு பாய்கிறது. ஒளர்வட்டம் கடவு மற்றும் டி.கே. காலனி ஆகிய பகுதிகளைக் கடந்து இந்த ஆறு செல்கிறது. சுற்றிலும் மரங்கள் அடர்ந்த காடு மற்றும் தோட்டங்கள் உள்ள அப்பகுதியில் ஒரு தடுப்பணையும் உள்ளதால் அந்த இடம் பேரழகுடன் இருக்கிறது. சுற்றிலும் உள்ள கிராம மக்களால் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் அந்த டி.கே.காலனி தடுப்பணைப்பகுதி, சமீபகாலமாக சமூக ஊடகங்களால் பிரபலமாகியுள்ளது. கேரள அரசால் சுற்றுலாத்தலமாக அங்கீகரிக்கப்படாத நிலையிலும், ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் அங்கு கூடிவருவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். மலப்புரத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கோபு, பிபிசியிடம் பகிர்ந்த தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், பூத்தோட்டம் கடவு என்ற இடத்திலிருந்து டி.கே.காலனி கீழ்ப்பகுதி வரையிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த ஆற்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு மழையும் பெய்யாத நிலையில் ஆற்றின் நீர்மட்டம் எதிர்பாராத வகையில் சில நிமிடங்களில் வேகமாக உயர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ''வெள்ளத்தின் வேகம் அதிகரித்ததால் பலரும் சுதாரித்துக் கொண்டு பாறைகளில் ஏறியுள்ளனர். அதன்பின்பு உள்ளூர்க்காரர்களும், தீயணைப்புப் படையினரும் வந்து கயிறுகளையும், நீளமான கம்புகளையும் போட்டு அவர்களைப் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கிருந்த பெரிய பெரிய பாறைகள்தான் பலருடைய உயிரைக் காப்பாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தன.'' என்றார் பத்திரிகையாளர் கோபு. End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இருப்பினும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மக்களில் உள்ளூரைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 9 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் விரைந்து வந்துள்ளனர். 3 பேரை உள்ளூர் மக்களின் உதவியுடன் தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர். மற்ற 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேருடைய உடல்கள் அதே நாளில் மீட்கப்பட்டன. டி.கே.நகர் காலனியைச் சேர்ந்த சஜிதா என்ற பெண்ணின் உடல், செப்டெம்பர் 22 செவ்வாய் காலையில் மீட்கப்பட்டது. திரூர் பகுதியைச் சேர்ந்த முஹம்மது குட்டி, எடரிக்கோடு பகுதியைச் சேர்ந்த அனஸ் யாசீன் மங்காடன், கருவாரக்குண்டைச் சேர்ந்த ரஹீம், வண்டூர் பகுதியைச் சேர்ந்த சஜ்ஜாத் மற்றும் ரஃபீக் ஆகியோர், உயிரிழந்த மற்ற 5 பேர் என்று கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்துக்கு சற்று நேரத்தில் நேரில் வந்த கேரள முதல்வர் சதீசன், மீட்புப்பணிகளைக் குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். அப்போது பேசிய கேரள முதல்வர் சதீசன், ''அந்த நேரத்தில் அங்கு மழை எதுவும் பெய்யவில்லை. வானம் மேகமூட்டமாக இருந்துள்ளது. திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த இடம் சுற்றுலாத்தலமாக அங்கீகரிக்கப்பட்ட இடமில்லை. ஆனால் சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்த காணொளிகளால் பலரும் அந்த இடத்திற்கு வருகின்றனர்.'' என்று தெரிவித்தார். வெள்ளப்பெருக்கு பற்றி அந்த இடத்தில் பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு கொடுக்காதது ஏன் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ''கடலோரப்பகுதி பகுதி, நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பகுதிகள், பெருமழை பெய்யும் பகுதிகளில் வானிலை அறிவிப்பின் அடிப்படையில் முன் அறிவிப்பு செய்யப்படும். ஆனால் 25 சதுர கி.மீ. சுற்றளவில் மழைக்கு வாய்ப்பேயில்லாத நிலையில் மலை உச்சியில் பெய்த பெருமழையால் இந்த ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்தான் இத்தனை உயிரிழப்புகளுக்குக் காரணமாகிவிட்டது.'' என்றார் முதல்வர் சதீசன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசால் தரப்படும் அனைத்து நிவாரணங்களும் விரைவாக வழங்கப்படும் என்றும், இத்தகைய இடங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள முதல்வர் சதீசன் தெரிவித்தார். ஆனால் இந்த ஆற்றில் வெளியாட்கள் வந்து குளிப்பது குறித்து தொடர்ந்து தாங்கள் எச்சரித்து வருவதாக ஊடகங்களில் பேசிய உள்ளூர்வாசிகள் பலரும் தெரிவித்தனர். இப்பகுதியில் மழை இல்லாவிட்டாலும், மலைப்பகுதியில் கனமழை பெய்தால் கோட்டப்புழையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். ஆற்று நீர் கலங்குவது ஆபத்துக்கான முக்கிய அறிகுறி என்று கூறும் உள்ளூர்வாசிகள், வெள்ளப்பெருக்கின்போது பாறைகள், மரக்கிளைகள் உள்ளிட்டவையும் வேகமாக அடித்துவரப்படும் என்றும் தகவல் பகிர்கின்றனர். பட மூலாதாரம், Getty Images இதுபற்றி பிபிசியிடம் விளக்கிய உள்ளூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், ''இந்த ஆற்றுக்கு 'பூக்கோட்டும்பாடம்' என்று பெயர். அதாவது வஞ்சகநதி என்று சொல்கிறார்கள். ஏனெனில் அமைதியாக ஓடும் இந்த ஆறு, திடீரென சீற்றமடைந்து வெள்ளமாகப் பெருக்கெடுக்கும். இதுவரை கோட்டப்புழாவில் வெவ்வேறு காலகட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஆற்றின் ஆபத்தை சுட்டிக்காட்டி ஒளர்வட்டத்தில் எச்சரிக்கைப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.'' என்றார். தீயணைப்புப்படையினருடன் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட நிலம்பூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மஜீத், மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட விதத்தை பிபிசியிடம் விளக்கினார். அவர் கூறுகையில், ''அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிறைய மக்கள் அங்கே இருந்தனர். அப்போது அங்கே மழையில்லை. வெயில்தான் அடித்துக்கொண்டிருந்தது. ஆனால் மலைக்கு மேலே நல்லமழை பெய்து திடீர் வெள்ளம் வந்ததும் மக்கள் சிக்கிக் கொண்டனர். நாங்கள் செல்வதற்கு முன்பே உள்ளூர் மக்கள் பலரையும் மீட்டுவிட்டனர்.'' என்றார். ''மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த நாங்கள், அங்கிருந்து ஆம்புலன்சில் மஞ்சேரி மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் சென்றோம். இறந்தவர்கள் பெரும்பாலும் உள்ளூர்க்காரர்கள்தான். வனத்துறையினர் வந்து அங்கே குளித்துக் கொண்டிருந்த பலரையும் வேகமாக வெளியேறச் சொல்லி எச்சரித்துள்ளனர். ஆனால் 9 பேர் மட்டும் ஆற்றின் நடுப்பகுதியிலிருந்து வெளியே வருவதற்குள் வெள்ளம் அதிகமாகி அடித்துச் சென்றுவிட்டது. '' என்றார் மஜீத். டி.கே.காலனி தடுப்பணைப் பகுதி, ஆபத்து நிறைந்த பகுதியாக இருந்தாலும் அப்பகுதியில் காவல்துறை, வனத்துறை என யாருடைய கண்காணிப்பும் இல்லை. வனத்துறையின் சோதனைச்சாவடிகள் எதுவும் அங்கில்லை எனினும், ஞாயிற்றுக்கிழமையன்று வனத்துறையினர்தான் உரிய நேரத்தில் வந்து ஆற்றில் குளித்தவர்களிடம் தகவல் தெரிவித்து, பலருடைய உயிரையும் காப்பாற்றியுள்ளனர். இதுபற்றி பிபிசியிடம் விளக்கிய நிலம்பூர் மாவட்ட வனஅலுவலர் கிடய்காலே, ''வெள்ளத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட தடுப்பணைப்பகுதி, வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில்லை. அதற்கு சற்று தொலைவில்தான் வனப்பகுதி உள்ளது. தடுப்பணை அமைந்துள்ள ஆற்றுப்பகுதி, வருவாய்த்துறைக்குச் சொந்தமான இடம். அதனால் வனத்துறை சார்பில் எந்த தடுப்புகளும் அங்கு அமைக்கப்படவில்லை.'' என்றார். இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''அன்று மலையுச்சியில் அதிகமழை பெய்து, அங்கிருந்து வனப்பகுதியைக் கடந்து வெள்ளம் வருவதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். உடனடியாக அந்த ஆற்றுப்பகுதிக்கு அருகில் பணியில் இருந்த எங்களுடைய ஊழியர்கள், தடுப்பணை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த மக்களிடம் மலையிலிருந்து வெள்ளம் பாய்ந்து வருவதைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் தகவல் தெரிவித்ததும் ஆற்றிலிருந்து பெரும்பாலான மக்கள் வேகவேகமாக வெளியேறிவிட்டனர். ஆற்றில் சற்று உள்பகுதியில் இருந்தவர்கள்தான் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.'' என்றார்.'' பட மூலாதாரம், KeralaGovernment கேரளத்தில் 6 பேர் உயிரைப் பறித்துள்ள கோட்டப்புழா, உற்பத்தியாகும் இடம் நீலகிரி என்று அதன் புவியமைப்பை பிபிசி தமிழிடம் வரைபடத்துடன் விளக்கினார் கேரளத்தைச் சேர்ந்த ஆசிரியரும், சூழலியலாளருமான ஹமீது அலி. இவர் மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு மற்றும் அதன் சிறப்புகளை விளக்கும் வகையில் யூடியூப் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதிலும் இதுபற்றி விரிவாக விளக்கியுள்ளார். பிபிசியிடம் பேசிய ஹமீது அலி, ''கோட்டப்புழா என்பது குந்திப்புழா ஆற்றின் கிளை ஆறாகும். அது சாலியாற்றின் துணை நதி. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி நீர்த்தேக்கப் பகுதியில் கோட்டப்புழா உற்பத்தியாகி, பாலக்காடு மாவட்டத்திலுள்ள அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவின் (Silent Valley National Park) பங்கி தபால், நாடுகாணி காட்சி முனை, சிஸ்பாரா வழியாக அங்கிண்டா சிகரத்திலிருந்து மேற்குப் பகுதியில் பாய்கிறது. ஞாயிறன்று அந்தப் பகுதிகளிலும், அட்டப்பாடியிலும் கனமழை பெய்திருக்கிறது. அதுதான் வெள்ளத்திற்குக் காரணம்.'' என்றார். ஒரு பகுதியில் மழை இல்லாவிட்டாலும், அடர்ந்த வனப்பகுதிகளில் கனமழை பெய்வது கேரள மாநிலத்துக்கு புதிய விஷயமில்லை என்று கூறுகிறார் ஹமீது அலி. மேற்குத் தொடர்ச்சி மலையின் நில அமைப்பு காரணமாக மழை மேகங்கள் மலைப்பகுதிகளில் உயர்ந்து குளிர்ச்சியடைந்து, உள்வனப் பகுதிகளில் கனமழையை ஏற்படுத்தும் அதே நேரத்தில் மலை அடிவாரப் பகுதிகளில் வெயிலும் கடும் வெப்பமும் நிலவக்கூடும் என்று கூறும் அவர், ஊரில் மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாத நேரத்தில்கூட காட்டுக்குள் பெய்யும் கனமழை காரணமாக ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கிறார். ''மேற்குத் தொடர்ச்சி மலையில் மக்கள் வசிப்பிடங்கள் குறைவாகவும், அணுகுவதற்கு கடினமாகவும் உள்ள உள்வனப் பகுதிகளில் பெய்யும் மழையின் நிலவரத்தை கீழ்ப்பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக அறிந்துகொள்ள முடியாமல் போகிறது. ஆனால் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு இயற்கையின் தன்மையை அனுபவத்தின் மூலமாக அறியமுடியும். ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு இத்தகைய ஆபத்துகளை முன்கூட்டியே உணர முடியாது.'' என்கிறார் ஹமீது அலி. ''தெளிவான வானமும் அமைதியாக ஓடும் ஆறும் இருப்பதைப் பார்த்து அந்த இடம் பாதுகாப்பானது என்று கருதும் நேரத்திலேயே சில சமயங்களில் நிலைமை சில நிமிடங்களில் மாறிவிடுகிறது. எனவே சுற்றுலாப் பயணங்களைத் திட்டமிடும்போது செல்லும் இடத்தைப் பற்றிய தெளிவான புரிதல் அவசியம். ஆறு அல்லது காட்டாற்றின் தோற்றப்பகுதி, அப்பகுதியின் வானிலை நிலவரம், மழை எச்சரிக்கை, முந்தைய காலங்களில் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் வெள்ளப்பெருக்குகள் போன்ற தகவல்களை அறிந்துகொண்ட பின்னரே பயணம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மழை பெய்யும் நாட்களிலும், மழை பெய்து முடிந்த உடனடியான காலகட்டத்திலும் ஆறுகள் மற்றும் காட்டாறுகளில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.'' என்றார் ஹமீதுஅலி. ஆபத்து நிறைந்த சுற்றுலாத் தலங்களில் உள்ளாட்சி நிர்வாகங்களும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கருத்தை, கேரள ஊடகங்களில் பேசியுள்ள சூழல் ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற பகுதிகளுக்கான நுழைவைக் கட்டுப்படுத்தும் சோதனைச் சாவடிகள் அமைத்தல், வருகையாளர்களின் விவரங்களைப் பதிவு செய்தல், வருகை மற்றும் வெளியேறும் நேரத்தைப் பதிவு செய்யும் முறை, வானிலை எச்சரிக்கைகளை வழங்குதல், ஆபத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் நுழைவைக் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்கின்றனர். இதுபற்றி மேலும் பேசிய சூழலியலாளர் ஹமீது அலி, ''இயற்கையை வெல்வதற்கான இடம் காடும் ஆறும் அல்ல. அதன் இயல்பைப் புரிந்துகொண்டு தேவையான முன்னெச்சரிக்கைகளுடன் மட்டுமே அத்தகைய இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஊரில் மழை இல்லை என்பதால் காட்டிலும் மழை இல்லை என்று அர்த்தமல்ல. காட்டில் பெய்யும் மழைநீர் கீழ்ப்பகுதிக்கு வந்து சேரும்போது, எச்சரிக்கைக்குக் கிடைக்கும் நேரம் பல நேரங்களில் மிகக்குறைவாகவே இருக்கும். இந்த உண்மையைப் புரிந்துகொள்வதே இதுபோன்ற பேரிடர்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான முதல் படியாகும்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
கேரள ஆற்றில் சில நிமிடங்களில் நீர்மட்டம் உயர 'நீலகிரி கனமழையே' காரணமா? வெயிலுக்கு நடுவே திடீர் வெள்ளம் - 6 பேர் பலி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk