Antarctica open water history தற்போது, இந்திய விஞ்ஞானிகள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த மர்மத்தின் பின்னணியில் உள்ள 250 ஆண்டுகால வரலாற்றை வெற்றிகரமாக அவிழ்த்துள்ளனர்! அண்டார்டிகாவின் 250 ஆண்டு கால ரகசியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இந்தியர்கள் அண்டார்டிகா கடல் பகுதியில் பனியால் சூழப்பட்ட இடத்தில், அவ்வப்போது மிகப்பெரிய திறந்த கடல் பகுதி உருவாகிறது. பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளுக்கு மர்மமாக இருந்த இந்த நிகழ்வின் 250 ஆண்டு கால வரலாற்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வில், அண்டார்டிகாவின் மாட் ரைஸ் பாலின்யா (Maud Rise Polynya) எனப்படும் திறந்த கடல் பகுதி குறித்த தகவல்கள் 1774-ம் ஆண்டு வரை பின்னோக்கிச் சென்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் 'தி கிரிஸ்பியர்' (The Cryosphere) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ‘பாலின்யா’ என்றால் என்ன? அண்டார்டிகா கடல் பகுதியில் பெரும்பாலான இடங்கள் கடல் பனியால் மூடப்பட்டிருக்கும். ஆனால், அந்தப் பனிக்கு நடுவே திடீரென ஒரு பெரிய பகுதி திறந்த கடலாக மாறும். இதுபோன்ற பனியில்லாமல் திறந்த நிலையில் இருக்கும் கடல் பகுதியை ‘பாலின்யா’ (Polynya) என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். மாட் ரைஸ் பாலின்யா, அண்டார்டிகாவின் வெட்டல் கடல் (Weddell Sea) பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பாலின்யா உருவாகும்போது கடலுக்கும் வளிமண்டலத்துக்கும் இடையிலான வெப்பப் பரிமாற்றத்தில் பெரிய மாற்றம் ஏற்படலாம். 122 மீட்டர் நீள பனிப்பாறை மாதிரி இந்த ஆய்வை இந்தியாவின் தேசிய துருவ மற்றும் கடல் ஆராய்ச்சி மையம் (NCPOR), புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் மேற்கொண்டனர். டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இதில் இணைந்தனர். ஆராய்ச்சியாளர்கள் கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள 'ஜுப்ரானென் பனிப்பாறையில்' (Djupranen Ice Rise) இருந்து 122 மீட்டர் நீளமுள்ள பனிப்பாறை மாதிரியை எடுத்தனர். பல ஆண்டுகளாகப் பெய்த பனி ஒன்றன் மீது ஒன்றாகப் படிந்து உருவான அடுக்குகள் அந்தப் பனிப்பாறையில் பாதுகாக்கப்பட்டிருந்தன. அவற்றில் இருந்த வேதிப்பொருட்களை ஆய்வு செய்ததன் மூலம், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியின் கடல் மற்றும் வளிமண்டலத்தில் நிலவிய சூழ்நிலைகள் குறித்து விஞ்ஞானிகளால் தகவல்களைப் பெற முடிந்தது. இந்தப் பனிப்பாறை மாதிரி கோவாவில் உள்ள (NCPOR) ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. 1774 முதல் 25 ஆண்டுகளில் பாலின்யா இருந்ததற்கான ஆதாரம் இந்த ஆய்வின் மூலம், மாட் ரைஸ் பாலின்யாவின் வரலாற்றை 1774-ம் ஆண்டு வரை பின்னோக்கிச் சென்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். இதில், கடந்த 250 ஆண்டுகளில் 25 ஆண்டுகளில் பாலின்யா உருவானதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதில் 3 முக்கிய நிகழ்வுகள், இதுவரை பதிவான மிகப்பெரிய பாலின்யா நிகழ்வுகளில் ஒன்றான 1974-76 காலகட்ட நிகழ்வுடன் ஒப்பிடக்கூடியதாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 1974-76-ல் 3 லட்சம் சதுர கி.மீ. கடல் பகுதி திறந்தது 1974 முதல் 1976 வரை ஏற்பட்ட பாலின்யா நிகழ்வு மிகவும் பெரியதாக இருந்தது. அதன் உச்சக்கட்டத்தில், திறந்த கடல் பகுதியின் பரப்பளவு 3 லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக இருந்தது. இதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளிலும் பெரிய அளவில் பாலின்யா உருவானது. அப்போது திறந்த கடல் பகுதி 40,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக இருந்தது. கடலின் வெப்பம் வெளியேறுவதால் என்ன நடக்கும்? பாலின்யா உருவாகும்போது, கடலில் இருக்கும் ஒப்பீட்டளவில் வெப்பமான நீர் நேரடியாகக் குளிர்ந்த அண்டார்டிகா வளிமண்டலத்தை எதிர்கொள்கிறது. இதனால் கடலில் இருக்கும் வெப்பம் வளிமண்டலத்துக்கு வெளியேறுகிறது. அதே நேரத்தில், கடலின் ஆழமான பகுதிகளில் உள்ள நீர் பெரிய அளவில் நகர்வதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் கடல் நீரோட்டத்திலும், அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள காலநிலையிலும் மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டும் ஏற்படவில்லை இந்த ஆய்வில் மற்றொரு முக்கிய தகவலும் தெரியவந்துள்ளது. பெரிய அளவிலான பாலின்யா நிகழ்வுகள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து ஏற்படவில்லை. மாறாக, அவை சில காலகட்டங்களில் குழுக்களாக ஏற்பட்டுள்ளன. இதனால், பாலின்யா உருவாக வளிமண்டலத்தில் நிலவும் குறிப்பிட்ட சூழ்நிலைகளும், கடலுக்குள் இருக்கும் குறிப்பிட்ட நிலைமைகளும் ஒரே நேரத்தில் இணைந்து செயல்பட வேண்டியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அண்டார்டிகாவின் காலநிலையைப் புரிந்துகொள்ள உதவும் கடந்த 250 ஆண்டுகளின் தகவல்கள் கிடைத்திருப்பது, இந்த மர்மமான நிகழ்வை புரிந்துகொள்வதில் முக்கியமானதாக கருதப்படுகிறது. பாலின்யா எதனால் உருவாகிறது, ஏன் சில ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் விரிவடைகிறது, அது கடல் நீரோட்டம் மற்றும் அண்டார்டிகாவின் காலநிலையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு உதவும். 1774 முதல் கிடைத்துள்ள இந்த நீண்டகால பதிவுகள், எதிர்காலத்தில் அண்டார்டிகாவில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு முக்கிய ஆதாரமாக அமையும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
அண்டார்டிகா பனி நடுவுல என்ன இவ்வளவு பெரிய ஓட்டை? இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk