வந்தே மாதரம் பாடுவதை சட்டமாக்கியது தொடர்பான வழக்கில், பாடலின் கடைசி நான்கு பத்திகள் இந்து தெய்வங்களை மையமாகக் கொண்டதால் அவற்றை கட்டாயப்படுத்துவது மதச்சார்பற்ற தன்மைக்கு முரணானது என டி.எம். கிருஷ்ணா மனு தாக்கல் செய்துள்ளார். வந்தே மாதரம் பாடலின் ஆறு பத்திகளையும் பாடுவதைக் கட்டாயமாக்கி அது தொடர்பான சட்டத்தின் தண்டனைப் பிரிவுகளை சேர்த்திருப்பதற்கு எதிர்த்துக் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணாவின் மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, இச்சட்டத்தின் தண்டனை சார்ந்த அம்சங்களை அரசியல் அமைப்பின் பிரிவு 25 மற்றும் 26 அளிக்கும் மத சுதந்திர உரிமைகளின் கீழ் பரிசீலிக்கலாம் எனக் கூறியது. முக்கியமாக, மதக் காரணங்களால் இப்பாடலைப் பாடாத ஒருவருக்கு எந்தக் குற்றவியல் அல்லது தண்டனை நடவடிக்கைகளும் விதிக்கப்படக் கூடாது என்றும், இதற்கு முன்மாதிரியாக 'பிஜோய் இமானுவேல்' தீர்ப்பு முழுமையாகப் பின்பற்றப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வந்தே மாதரத்தின் கடைசி நான்கு பத்திகள் இந்து தெய்வங்களை மையமாகக் கொண்டுள்ளதால், அவற்றைக் கட்டாயமாக்குவது மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என கிருஷ்ணாவின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே மாதரம் வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்த 'நக்ஸலைட்' என்ற கருத்துக்கு மூத்த வழக்கறிஞர் எஸ். முரளிதர் உச்ச நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தாக்கல் செய்த மனு விசாரணையின் போது, சட்ட உருவாக்கம் நக்ஸலைட் மனநிலைக்கு ஏற்ப அமைய முடியாது என மேத்தா கூறினார். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த முரளிதர், ஒரு சட்ட அதிகாரி இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது அழகல்ல" எனக் கூறி, அவ்வார்த்தையைத் திரும்பப் பெற வலியுறுத்தினார். இதனால் நீதிமன்றத்தில் காரசார விவாதம் ஏற்பட்டது.
வந்தே மாதரம் சர்ச்சை| ’இந்து தெய்வங்களை மையம் கொண்டதால்..’ உச்சநீதிமன்றம் சொன்ன முக்கிய விஷயம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk