வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற இடைக் காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று, மேலவை மற்றும் கீழவை ஆகிய இரு அவைகளையும் தன்வசப்படுத்தியுள்ளது. இது அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (மேலவை - 100 இடங்கள்), பிரதிநிதிகள் சபை (கீழவை - 435 இடங்கள்) ஆகிய இரு அவை களைக் கொண்டது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். செனட் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்றாலும், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறைவடையும். இதன்படி, பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் செனட் சபையின் 35 இடங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. அதிபரின் 4 ஆண்டு பதவிக்காலத்தின் நடுவில் இத்தேர்தல் வருவதால், இது 'இடைக்காலத் தேர்தல்' என அழைக்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க இடைக்காலத் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதோடு, பல்வேறு மாகாணங்களின் ஆளுநர், மேயர் பதவிகளுக்களான வாக்குப் பதிவும் நடைபெற்றது. இத்தேர்தலில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தனர். வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை முதலே முடிவுகள் வெளியாக தொடங்கின. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 367 இடங்களில் ஜனநாயகக் கட்சி 228 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. ஆளும் குடியரசு கட்சி 139 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. செனட் சபையில் தேர்தல் நடைபெற்ற 35 இடங்களில், முடிவு அறிவிக்கப்பட்ட 33 தொகுதிகளில் 20 இடங்களை ஜனநாயகக் கட்சி வென்றது. இதன் மூலம் செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் பலம் 54 ஆக உயர்ந்து பெரும்பான்மை கிடைத்துள்ளது. 36 மாகாணங்களுக்கு நடைபெற்ற ஆளுநர் தேர்தலில் 22 மாகாணங்களில் ஜனநாயகக் கட்சியும், 12 மாகாணங்களில் குடியரசு கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள், ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியத்துவம் ஏன்? அமெரிக்காவில் புதிய சட்டங் களைக் கொண்டு வரவும், வரி மற்றும் வரவு-செலவுத் திட்டங்களை (பட்ஜெட்) அங்கீகரிக்கவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் கட்டாயம் தேவை. எனவே, நாடாளுமன்றத்தில் அதிபரின் சொந்தக் கட்சி பெரும்பான்மை பெற்றால் மட்டுமே அவரால் நினைத்த திட்டங்களை எளிதாகச் சட்டமாக்க முடியும். இடைக்காலத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையையோ அல்லது இரண்டு அவைகளையுமோ எதிர்க்கட்சி கைப்பற்றினால், அதிபரின் திட்டங்களுக்குப் பெரும் முட்டுக்கட்டை ஏற்படும். இதனால் அதிபரால் எந்தவொரு முக்கியப் புதிய சட்டத்தையும் எளிதில் கொண்டு வர முடியாமல் ஆட்சி நிர்வாகம் ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகும். தோல்வியை ஏற்றுக் கொண்ட ட்ரம்ப் அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவு குறித்து, அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் முடிவுகளை நான் முழு மனதுடன் ஏற்கிறேன். ஜனநாயகக் கட்சியினருக்கு வாழ்த்துகள்.அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வரும் சட்டங்களை நிராகரிக்கும் ‘வீட்டோ' அதிகாரம் என்னிடம் உள்ளது. அமெரிக்காவில் அதிபர் பதவி என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. தேர்தல் முடிவுகளுக்கு ஈரான் போரும் ஒரு காரணமாக இருக்கலாம். என் பெயர் வாக்குச்சீட்டில் இடம் பெற்றிருந்தால் நாங்கள் அமோக வெற்றி பெற்றிருப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார். வாக்கு எண்ணும் முறை அமெரிக்காவில் இந்தியாவைப் போல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்படுவதில்லை. மாறாக, காகித வாக்குச்சீட்டுகள் மூலமே பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இருப்பினும், இந்த வாக்குச்சீட்டுகளை எண்ணுவதற்கு நவீன ஸ்கேனிங் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவில் வாக்காளர்கள் தங்களுக்குப் பிடித்த வேட்பாளரின் பெயருக்கு அருகில் உள்ள வட்டம் அல்லது கட்டத்தில் குறியீடு இடுகின்றனர். பின்னர், அந்த வாக்குச்சீட்டுகள் வாக்குச்சாவடிகளில் அல்லது தனி வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள ஸ்கேனிங் இயந்திரங்களில் செலுத்தப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் வாக்குச்சீட்டுகளில் உள்ள குறியீடுகளைப் படித்து, ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகளைத் தானாகவே கணக்கிடுகின்றன. பெரிய வாக்கு எண்ணும் மையங்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாக்குச்சீட்டுகளைச் செயலாக்கும் திறன் கொண்ட அதிவேக ஸ்கேனர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கான வாக்குச்சீட்டுகளையும் விரைவாக எண்ணி முடிவுகளை வெளியிட முடிகிறது.
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗