சென்னை: “மத்திய - மாநில உறவுகளை ஆராய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த குழுவை கலைத்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டுக்கு முதல்வர் விஜய் துரோகம் இழைத்துள்ளார்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்டிருந்த உயர்மட்டக் குழுவை கலைத்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த ‘சோப்ளாங்கி அரசு’ கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த டம்மி முதல்வர் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார். தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?” என்று உதயநிதி விமர்சித்துள்ளார். இதனிடையே, திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், மத்திய - மாநில உறவுகளை ஆராய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் குழுவை மாநில அரசு கலைத்துள்ளதை சுட்டிக் காட்டி, “திரையரங்கு உரிமைகளுக்கு யெஸ், மாநில உரிமைகளுக்கு நோ” எனப் பதிவிட்டுள்ளார்.
“குரியன் ஜோசப் குழுவைக் கலைத்து தமிழகத்துக்கு முதல்வர் விஜய் துரோகம்” - உதயநிதி கண்டனம்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗