லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் குடும்ப பின்னணி கொண்ட நித்யா ராமன் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் லாஸ் ஏஞ்சல்ஸின் அடுத்த மேயராக உள்ளார். தற்போதைய லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸுக்கு எதிராக நித்யா ராமன் போட்டியிட்டார். இதில் 52 சதவீத வாக்குகளை பெற்று நித்யா ராமன் வெற்றி பெற்றார். இதன்மூலம் லாஸ் ஏஞ்சல்ஸின் முதல் இந்திய - அமெரிக்கர் மற்றும் தெற்காசிய மேயர் என்ற அடையாளத்தை அவர் பெற்றுள்ளார். அமெரிக்காவின் மிகப் பெரிய நகரங்களின் பட்டியலில் ஒன்றாக லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக கட்சியை சேர்ந்த கரேன் பாஸுக்கு அரசியல் ரீதியான ஆதரவு அமோகமாக இருந்தது. முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உட்பட பலர் தங்களது ஆதரவை அவருக்கு தெரிவித்திருந்தனர். இடதுசாரி அமைப்பான அமெரிக்க ஜனநாயக சோசயலிஸ்ட் அமைப்பின் ஆதரவு நித்யா ராமனுக்கு இருந்தது. இந்நிலையில், கடும் போட்டிக்கு மத்தியில் நித்யா வெற்றி பெற்றுள்ளார். மாற்றம் நிகழ காலம் எடுக்கும் “லாஸ் ஏஞ்சல்ஸின் அடுத்த மேயராகப் பொறுப்பேற்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். தற்போதைய மேயர் கரேன் பாஸை தொடர்பு கொண்டு எனது நன்றியை தெரிவித்தேன். இந்த நகரத்தை நான் நேசிக்கிறேன். மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இனி நான் செய்ய வேண்டிய பணிகள் கடினமானவை. மாற்றம் நிகழ காலம் எடுக்கும். அதற்கு அவகாசம் தேவைப்படும். நாம் அனைவரும் இணைந்து இந்த நகரத்துக்கு ஏற்ற வகையிலான சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க உள்ளோம். நன்றி” என்று நித்யா ராமன் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தில் 1981-ல் பிறந்தவர்தான் நித்யா ராமன். இவருக்கு 6 வயது இருக்கும்போது, பெற்றோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் கோட்பாடும், மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நகரத் திட்டமிடலும் பயின்றார். இவர் ஒரு காலத்தில் சென்னைக்குத் திரும்பி, தூய்மை மற்றும் சுகாதார மேம்பாட்டுக்காக ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கினார். கடந்த 2013-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறிய இவர், வீடு இல்லாதவர்களுக்காக செலா (SELAH) என்ற அமைப்பைத் தொடங்கினார். மேலும், ‘மீ டூ’ இயக்கத்துடன் தொடர்புடைய ‘டைம்ஸ் அப் என்டர்டெய்ன்மென்ட்’ அமைப்பிலும் பணியாற்றினார். கடந்த 2020-ல் ஹிலாரி கிளிண்டன் போன்ற ஜாம்பவான்களின் ஆதரவு பெற்ற ஒருவரைத் தோற்கடித்து, லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசியப் பெண் என்ற சாதனையைப் படைத்தார் நித்யா ராமன். இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்தானி கடந்த ஆண்டு நடந்த நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார். இந்நிலையில், நித்யா ராமன் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராக தேர்வாகி உள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நித்யா ராமன் தேர்வு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗