போலீஸ் காவல் முடிந்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஸ். சென்னை: ரூ. 400 கோடி முறைகேடு வழக்கில் 3 நாட்கள் போலீ்ஸ் காவலில் விசாரிக்கப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், விசாரணை முடிந்து நேற்று மாலை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ. 400 கோடி வரை வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகத் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரை கடந்த 3 நாட்களாக தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி நேற்று மாலை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்னிலையில் அன்பில் மகேஸை ஆஜர்படுத்தினர். அப்போது, அன்பில் மகேஸின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தி்ல் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ‘‘போலீஸார் உங்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தினார்களா?’’ என்று அன்பில் மகேஸைப் பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, அன்பில் மகேஸ், ‘போலீஸார் துன்புறுத்தவில்லை. முறையான உணவு வழங்கப்பட்டது’ என்று தெரிவி்த்தார். பின்னர் அன்பில் மகேஸை நாளை (நவ.6) வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து போலீஸார் மீண்டும் அவரை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் திரண்டு இருந்த திமுகவினர் மத்தியில் அன்பில் மகேஸிடம் நலம் விசாரித்த திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், அன்பில் மகேஸைப் பார்த்து கண் கலங்கி, ‘தீபாவளி நேரத்தில் இப்படியா? ’ என்றார். அதற்கு அன்பில் மகேஸ், ‘எதையும் சந்திப்போம் அக்கா.. நீங்க கலங்காதீங்க... பார்த்து பத்திரமா ஊருக்குப் போங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என ஆறுதல் கூறும்போது அவரும் கண் கலங்கினார். இதற்கிடையே, அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை இதே நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்: நாளை வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗