'பாலியல் துன்புறுத்தல், மதம் மாற நெருக்கடி': மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதாக புகார்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
'பாலியல் துன்புறுத்தல், மதம் மாற நெருக்கடி': மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதாக புகார்

பட மூலாதாரம், BBC/Archisman Saha மேற்கு வங்க மாநிலத்தில் கிறிதவ சமூகத்தினர் மீது பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்ட சிலர் தங்கள் வீட்டிற்குள் நுழைந்து, தங்களைத் தாக்கி, அரசு வசதிகளை நிறுத்திவிடுவதாக மிரட்டியதாக கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் பன்ஸ்குரா பகுதியில் வசிக்கும் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தங்கள் குடும்பத்தினர் ஒன்றாகச் சேர்ந்து பிரார்த்தனை செய்யத் தயாராகிக் கொண்டிருந்தபோது, 30-க்கும் மேற்பட்டோர் மது அருந்திய நிலையில் வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் நுழைந்து தாக்கியதாக இந்தத் தாக்குதலில் காயமடைந்த பார்வதி ஹெம்ப்ரம் சோரன் பிபிசி நியூஸ் பங்களாவிடம் தெரிவித்தார். "அவர்கள் என் தலைமுடியைப் பிடித்து அடித்தார்கள். இந்த வீட்டில் எங்களை வாழ விடமாட்டோம் என்று கூறினார்கள். என் கணவரை மிகவும் மோசமாகத் திட்டினார்கள். எங்கள் உறவினர்களும் அப்போது எங்களுடன் இருந்தனர், அவர்கள் என் சகோதரிகளையும் அடித்தார்கள். எங்கள் கைப்பேசிகளையும் பறிக்க முயன்றார்கள்." என்று பார்வதி ஹெம்ப்ரம் கூறினார். பட மூலாதாரம், Herod Mullick சில நாட்களுக்கு முன்பு, துர்கா பூஜையின்போது மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் சந்திரகோனா பகுதியில் பல கிறிஸ்தவக் குடும்பங்களை பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் ஒரு குழு தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆண்டு மே மாதம் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்த பல செய்திகள் வெளியாகியுள்ளன. மே 13 முதல் செப்டம்பர் 20 வரை மேற்கு வங்கத்தின் 13 மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக மொத்தம் 60 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தத் தரவுகளை 'இந்தியா ஹேட் லேப்' என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பட மூலாதாரம், ANI பன்ஸ்குராவில் வசிக்கும் பார்வதி சோரன், இதற்கு முன்பும் இந்த குற்றவாளிகள் தனது குடும்பத்தை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். End of அதிகம் படிக்கப்பட்டது அக்டோபர் 11 அன்றும், அதே நபர்கள் வீட்டிற்கு வந்து, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியதற்காக மிரட்டியதாக அவர் கூறுகிறார். "இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் அவர்கள் திருடர்களைப் போல மது அருந்திய நிலையில் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அப்போது மிகவும் இருட்டாக இருந்ததால் வெளியாட்களால் வீடியோ எடுப்பது சாத்தியமில்லை. நான் என் செல்போனில் வீடியோ எடுத்தேன். ஆனால், அவர்கள் எனது போனைப் பறித்து அதிலிருந்த வீடியோவை அழித்துவிட்டார்கள். இறுதியில், காவல்துறை மூலமாகத்தான் எனது கைப்பேசியைத் திரும்பப் பெற்றேன்" என்றார் அவர். "கிறிஸ்தவ மதத்தை விட்டுவிட்டு இந்து மதத்திற்குத் திரும்புமாறு அவர்கள் எங்களை வற்புறுத்துகிறார்கள். நாங்கள் எங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே கிறிஸ்தவ மதத்திற்கு மாறி அதைப் பின்பற்றி வருகிறோம் என்று அவர்களிடம் கூறினோம். அதனால்தான் நாங்கள் தாக்கப்படுகிறோம்." என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம், Herod Mullick பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காகத் தங்கள் அமைப்பின் வழக்கறிஞர் ஒருவர் புகார்தாரரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, தாக்குதல் நடத்தியவர்கள் அவரது செல்போனைப் பறித்ததாக பெங்கால் கிறிஸ்தவ சேவை அமைப்பின் நிறுவனர் ஹெரோட் மல்லிக் தெரிவித்துள்ளார். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டவர்கள், அந்த வழக்கறிஞருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. தாங்கள் பேசுவது வழக்கறிஞரிடம் என்பது தெரியவந்ததும் அவர்கள் அழைப்பைத் துண்டித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் கிறிஸ்தவத்தை 'அமெரிக்க மதம்' என்று அழைத்ததாகவும், அந்த குடும்பத்தை இந்து மதத்திற்கு மாறுமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. பார்வதி சோரன் பிபிசி நியூஸ் பங்களாவிடம் பேசுகையில், "எங்கள் முற்றத்தில் ஒரு துளசி மேடையையும், ஒரு மன்சா கோயிலையும் கட்டுமாறு அவர்கள் எங்களை வற்புறுத்தினர். நாங்கள் கிறிஸ்தவர்கள், அதைச் செய்ய மாட்டோம் என்று அவர்களிடம் கூறினோம்," என்றார். "இப்போது எங்களுக்கு யாரும் வேலை கொடுக்கவிடாமல் தடுக்கிறார்கள். எங்கள் மின்சாரம், குடிநீர் இணைப்புகளைத் துண்டித்துவிடுவோம் என்றும், ரேஷன் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் உதவிகளை நிறுத்திவிடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள். எங்களுக்கு யாரும் உதவக்கூடாது என்பதற்காக அனைவரையும் அச்சுறுத்துகிறார்கள்" என்றார். சம்பவம் நடந்தபோது புகார்தாரர், அவரது கணவர், இரண்டு சிறு குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களது உறவினர்கள் மூவரும் உடனிருந்துள்ளனர். "எங்கள் பிரார்த்தனை செய்யும் இடம் எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. எங்களை வெளியே இழுத்துச் சென்று தாக்கினார்கள். அவர்கள் என்னைத் தாக்கினார்கள், என் நாத்தனாரை அறைந்தார்கள், என் கணவரைத் திட்டினார்கள்." என்று பார்வதி கூறுகிறார். "மீண்டும் வந்து தாக்குவோம் என்றும், இந்த முறை 50 முதல் 100 பேரை அழைத்து வருவோம் என்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மிரட்டினர். நாங்கள் புகார் அளித்துள்ளோம். ஆனால், காவல்துறை இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை" என்றும் அவர் தெரிவித்தார். என் கணவர் டோட்டோ (மின்சார ரிக்‌ஷா) ஓட்டுகிறார். அதை வாங்குவதற்காக இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளோம். இத்தகைய சூழலில் எங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது, வாங்கிய கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று எனக்குப் புரியவில்லை" என்றார் அவர். பட மூலாதாரம், Asian News International இந்தச் சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பு, மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் சந்திரகோனா பகுதியில் பல குடும்பங்கள், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் தங்களைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டியிருந்தன. அக்டோபர் 18 முதல் 20ஆம் தேதி வரை இந்தச் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சம்பவத்தின்போது ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதுடன், அவரது ஆடைகளைக் கிழித்து, மதம் மாற்றும் நோக்கில் அவரை வலுக்கட்டாயமாகப் பூஜை மண்டபத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சந்திரகோனா சம்பவம் தொடர்பாகப் புகார் அளித்த பெண்ணிடம் பிபிசி நியூஸ் பங்களா தொலைபேசியில் பேசியபோது, தாக்குதலில் காயமடைந்ததால் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். காவல்துறையில் அளித்த புகாரில், "2026 அக்டோபர் 18ஆம் தேதி பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், பஜ்ரங் தளத்துடன் தொடர்புடைய சிலர் என் வீட்டுக்கு வந்தனர். அப்போது நான் எனது குடும்பத்தினருடன் இருந்தேன். இயேசு கிறிஸ்து மீதான எங்கள் நம்பிக்கையைக் கைவிடுமாறு அவர்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுத்ததுடன், மிரட்டவும் செய்தனர். எங்கள் மீது தாக்குதலும் நடத்தினர்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அன்று தாக்குதல் நடத்தியவர்கள் தலையிலும் காதுகளுக்குக் கீழேயும் அடித்ததால் தான் மயக்கமடைந்ததாக அந்தப் பெண் குற்றம்சாட்டுகிறார். தான் மயக்கத்தில் இருந்தபோது தனது ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "அதன்பிறகு, தூய்மைப்படுத்தும் சடங்கு என்ற பெயரில் பொதுவெளியில் என்னைக் குளிக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். எனது சம்மதமின்றி ஆடைகள் அகற்றப்பட்டு, அந்தச் சடங்கில் பங்கேற்கவும் நான் வற்புறுத்தப்பட்டேன்" என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 20ஆம் தேதி தன்னையும் தன் கணவரையும், மேலும் நான்கு கிறிஸ்தவர்களுடன் தங்களது விருப்பத்துக்கு மாறாக ஒரு கிராமத்தின் பூஜை மண்டபத்துக்கு அழைத்துச் சென்று, சில மதச் சடங்குகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். "நான் காவல்துறையைத் தொடர்புகொண்டு புகார் அளித்தால் என்னை உயிருடன் விடமாட்டோம் என்று அவர்கள் இன்னமும் மிரட்டுகிறார்கள். நான் மிகவும் அச்சத்திலும் மன உளைச்சலிலும் இருக்கிறேன். எனக்கோ எனது குடும்ப உறுப்பினர்களுக்கோ எந்த நேரத்திலும் பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன்" என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், ANI இரண்டு சம்பவங்களிலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பன்ஸ்குரா காவல் நிலையத்தில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரியை பிபிசி பங்களா தொடர்பு கொண்டபோது, ​​தனக்கு எழுத்துப்பூர்வமாக புகார் வந்துள்ளதாகவும், ஆனால் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். "புகார் கிடைத்தவுடனேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்பது அவசியமில்லை. எனது விசாரணை அதிகாரி தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இப்போதைக்கு இதற்கு மேல் எந்தத் தகவலையும் எங்களால் தெரிவிக்க முடியாது" என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரத்தில், மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் சந்திரகோனா சம்பவம் தொடர்பாக அக்டோபர் 20ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, பெண்ணின் ஆடைகளைக் களையும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்துதல், வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், குற்றவியல் மிரட்டல், பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் இந்த வழக்கு விசாரணையில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார். "யாரையும் கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இதுவரை சாட்சிகளின் வாக்குமூலங்கள், மருத்துவ அறிக்கைகள் அல்லது சமர்ப்பிக்கப்பட்ட பிற ஆவணங்களில் கிடைக்கவில்லை" என்றார் அவர். முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 13 குற்றம்சாட்டப்பட்டவர்களும் உள்ளூர் நபர்கள் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவராக உள்ள சந்திரநாத் தாஸ், கிறிஸ்தவ சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று பிபிசி நியூஸ் பங்களாவிடம் தெரிவித்தார். தங்கள் அமைப்பு யாரையும் தாக்குவதில்லை என்றும், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், மேற்கு வங்கத்தின் கிராமப்புறங்களில் மதக் கல்வி மூலம் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் இந்து மதத்தைப் பின்பற்றச் செய்வதற்கான பிரசாரத்தில் தங்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சந்திரநாத் தாஸ் கூறுகையில், "எங்கள் பணி சந்திரகோனா அல்லது மிட்னாப்பூருடன் மட்டும் நின்றுவிடவில்லை. இந்தியா முழுவதும், மேற்கு வங்கத்திலும் இந்தப் பணி நடைபெற்று வருகிறது. முடிந்தவரை அதிகமான கிறிஸ்தவர்களை இந்துக்களாக மாற்றுவதுதான் எங்கள் இலக்கு. அவர்கள் இந்துக்களாக மாறுவார்கள். அதுதான் எங்கள் நோக்கம். யாரும் கிறிஸ்தவர்களாக இருக்க மாட்டார்கள்" என்றார். 1964ஆம் ஆண்டு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்தே மதமாற்றத்தைத் தடுப்பதும், தங்கள் மதத்தைக் கைவிட்டு வேறு மதத்துக்குச் சென்றவர்களை மீண்டும் தங்கள் மதத்துக்குக் கொண்டுவருவதும் அமைப்பின் நோக்கமாக இருந்து வருவதாக அவர் கூறினார். மேற்கு வங்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் 'இந்துக்களாக மாற்றப்படுவதாகவும்' அவர் கூறினார். இந்தப் பணிகள் வெளிப்படையாகவும், பகல் நேரத்திலும், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தும்தான் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், ANI "இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தாக்குதலில் ஈடுபடுபவர்கள் நாளுக்கு நாள் அதிக துணிச்சலுடன் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது இதற்குக் காரணமாக இருக்கலாம். அவர்களுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வருகிறது, ஏன் இவ்வளவு அச்சமின்றிச் செயல்படுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை" என்று பிபிசி நியூஸ் பங்களாவிடம் ஹெரோட் மல்லிக் தெரிவித்தார். இவர் பெங்கால் கிறிஸ்டியன் சர்வீஸ் அமைப்பின் நிறுவனர் ஆவார். தங்களது கோரிக்கைகளுக்கு அரசு எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும், இந்தச் சம்பவங்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். "இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கு வங்கத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் தேப்ஜித் சர்க்காரிடம் பிபிசி நியூஸ் பங்களா கேட்டபோது, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான புதிய அரசு எந்தவிதமான அநீதி மற்றும் ஒடுக்குமுறையையும் 'கொஞ்சமும் சகித்துக் கொள்வதில்லை' கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் கூறினார். "தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கருதுபவர்கள் சட்டத்தின் உதவியை நாடி புகார் அளிக்க வேண்டும். சட்டம் தனது கடமையைச் செய்யும். யாருக்கும் வகுப்புவாத ரீதியிலான சலுகைகளை நாங்கள் வழங்க மாட்டோம். அதேபோல், யாரிடமிருந்தும் வகுப்புவாத ரீதியிலான ஆதாயத்தையும் பெற விரும்பவில்லை" என்றும் அவர் தெரிவித்தார். "யார் எப்படி நடந்துகொள்ள வேண்டும், யார் எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும், யார் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது இருக்கக் கூடாது என்பதைத் தீர்மானிப்பது எங்கள் வேலை அல்ல. எங்கள் மாநிலத்தில் மதமாற்றத்துக்கு அங்கீகாரம் இல்லை" என்றும் அவர் கூறினார். மேற்கு மிட்னாப்பூரில் கிறிஸ்தவக் குடும்பம் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் பாஜகவை விமர்சித்துள்ளார். சந்திரகோனா பகுதியில் ஒரு பெண்ணின் ஆடைகளைக் களைந்து, அவரைக் கட்டாயப்படுத்தி 'தூய்மைப்படுத்தும் சடங்கு' நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை