புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வீட்டில் தீபாவளி தேநீர் விருந்து நடைபெற்றது. இதில், ஐந்து முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களைத் தனது இல்லத்துக்கு தேநீர் விருந்துக்கு வருமாறு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிகழ்வில் பிரியங்கா வத்ரா, சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ், குமாரி செல்ஜா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். மேலும், முன்னாள் முதல்வர்களான ஹரியானாவின் பூபேந்திர சிங் ஹூட்டா, சத்தீஸ்கரின் பூபேஷ் பாகல், ராஜஸ்தானின் அசோக் கெலாட், உத்தரகண்ட்டின் ஹரிஷ் ராவத் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் திக்விஜய் சிங் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும், கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைச் சேர்ந்த பல தலைவர்களும் இதில் பங்கேற்றனர். இதனை ஒரு தீபாவளி சந்திப்பு மற்றும் சமூகக் கலந்துரையாடல் என்று குறிப்பிட்டனர். எனினும், இதில் வாக்குத் திருட்டு விவகாரம், கட்சியின் எதிர்க்கால பிரச்சார வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. புதுடெல்லியின் சுனேரி பாக் சாலையில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பிற்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் எதுவும் வெளியிடப்படவில்லை. தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் தொடர்பாகத் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இண்டியா கூட்டணியின் பேரணிக்கு பின்பான அடுத்தகட்ட வியூகம் அமைக்க ராகுல் காந்தி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் ’வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்’ என்ற பெயரில் பேரணி நடத்தப்பட்டது. அதற்கு முந்தைய நாள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, பதவி நீக்க நடவடிக்கைக்கு இணையான ஒரு நடவடிக்கையை இந்தக் கூட்டணி வெளிப்படையாகத் தொடங்கியிருந்தது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி ஒவ்வொரு முக்கியத் தலைவர்களைத் தனித் தனியாகச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, தனிப்பட்ட உரையாடல்களுடன், அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
ராகுல் காந்தி வீட்டில் தீபாவளி தேநீர் விருந்து: 5 முன்னாள் முதல்வர்களுடன் ஆலோசனை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗