திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளை முடிக்க விவசாயிகளுக்கு வடமாநில தொழிலாளர்கள் கைகொடுத்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3,49,775 ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1,14,945 ஏக்கர் சாதாரண நடவு மற்றும் திருந்திய நெல் சாகுபடி மூலமும், நேரடி விதைப்பின் மூலம் 1,78,865 ஏக்கர் என மொத்தம் 2,93,810 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள 55,965 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகள் நடைபெற வேண்டிய சூழலில், விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நடவுப் பணிகள் பெருமளவு பாதித்துள்ளன. விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட காரணம், சம்பா சாகுபடி பணிகள் தொடங்கிய நிலையில், 100 நாள் வேலை திட்ட பணிகளும் நடைபெற்று வருவதே. 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த வேலை நேரம் மற்றும் ரூ,300 கூலி வழங்கப்பட்டு வருவதால், தமிழக விவசாயத் தொழிலாளர்கள் 100 நாள் வேலைத் திட்ட பணிகளுக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். இதனால், விவசாயப் பணிகளை மேற்கொள்ள தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் பரிதவித்து வந்த நிலையில், அவர்களுக்கு வடமாநில தொழிலாளர்கள் கைகொடுத்து, சம்பா சாகுபடி பணிகளை முடிக்க உதவி வருகின்றனர். முத்துப்பேட்டை, மன்னார்குடி நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் பரவலாக நடவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து புத்தகரம் விவசாயி அன்பு கூறியது: “விவசாய பணி தொடங்கிவிட்ட நிலையில், 100 நாள் வேலையை அரசு நிறுத்தி வைக்காத காரணத்தால், அனைத்து கிராமங்களிலும் விவசாய வேலைக்கு செல்வதை கைவிட்டு, 100 நாள் வேலைக்கு செல்வதற்கே பெருமளவு விவசாய தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்துள்ள திருத்துறைப்பூண்டி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து நாற்றுப்பறித்து ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய ரூ.15,000 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால், வடமாநில தொழிலாளர்கள் நாற்றுப் பறித்து, நடவு செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் அளவுக்கே செலவாகிறது. பல்வேறு நெருக்கடிகளில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு, வடமாநில தொழிலாளர்கள் குறைந்த கூலியில் பணிகளை செய்து கொடுத்து வருகின்றனர் இது எங்களுக்கு பெரும் உதவியாக உள்ளது” என தெரிவித்தார். இதே கருத்து இப்பகுதியில் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகளிடம் நிலவுகிறது.
திருவாரூர் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗