சென்னை: ‘வெற்றி வீடு’ திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் முதல் கட்டமாக 70,000 வீடுகள் கட்டுவதற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்ட அரசாணை: தமிழக கிராமப்புறங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிதரும் நோக்கில் ‘வெற்றி வீடு’ திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் (2026-27) முதல்கட்டமாக 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சமையலறையுடன் 360 முதல் 500 சதுர அடியில் ஆர்சிசி மேற்கூரையுடன் வீடு கட்ட ரூ.5 லட்சம் வழங்கப்படும். பயனாளிகளே வீடு கட்ட வேண்டும். அடித்தளம், ஜன்னல் மட்டம், மேற்கூரை, கட்டுமான நிறைவு என 4 தவணைகளில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். நிலம் போதாவிட்டால் தரை, முதல் தளத்துடன் வீடு கட்டலாம். கழிப்பறை இல்லாதவர்களுக்கு ரூ.12,000 செலவில் கழிப்பறை அமைக்கப்படும். வீடற்றோர் பட்டியல், மறுகணக்கெடுப்பு, புதிய குடிசைக் கணக்கெடுப்பு மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். குடிசை, மண் சுவர் மற்றும் பல வீனமான கூரையுள்ள வீடுகளில் வசிப்போர், பட்டா அல்லது உரிமை ஆவணம் வைத்திருந்தால் தகுதி பெறுவர். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ளோர், ஏற்கெனவே அரசுவீட்டுத் திட்டத்தில் பயன் பெற்றோர் சேரமுடியாது. விதவைகள், ஆதரவற்ற பெண்கள், 3-ம் பாலினத்தவர், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், ஆட்சியர் விருப்ப ஒதுக்கீட்டில் தலா 5 சதவீதம் ஒதுக்கப்படும். எஸ்சி,எஸ்டி பிரிவுக்கு 40 சதவீதமும், பிறருக்கு 60 சதவீதமும் ஒதுக்கப்படும். இதற்கு வங்கிக்கடனாக ரூ.1 லட்சம் வரை பெறவும், முறையாகத் திருப்பிச் செலுத்துபவருக்கு 3 சதவீத வட்டி மானியம் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வழங்கப்படும். பயனாளிகள் பட்டியல் ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் tnrd.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வெற்றி வீடு’ திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.3,500 கோடி ஒதுக்கீடு: நடப்பாண்டில் ஊரகப் பகுதிகளில் 70,000 வீடுகள்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗