செய்தியாளர் - ராஜ்குமார்.ர தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கண்ணுகுடி பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான சுதர்சன். இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக தென்கொரியாவின் சியோரா நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ரோபோ ஒன்று சுதர்சனின் மார்பு பகுதியில் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுதர்சன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தென்கொரியாவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதர்சன் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், அவரது பெற்றோர் திருமணத்திற்காக பெண் பார்த்து கடந்த வாரம் நிச்சயமும் செய்திருந்ததாக கூறப்படுகிறது. விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக சுதர்சன் விபத்தில் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஒருபுறம், மகனின் மரணத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சியிலும், துயரத்திலும் இருக்கும் நிலையில், மறுபுறம் அவரது உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளுக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுதர்சனின் குடும்பத்தினர் படும் துயரத்தையும், மன உளைச்சலையும் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரது உடலைச் சொந்த ஊருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என கிராம மக்களும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்கொரியாவில் நடந்த பயங்கரம்.. ரோபோ மோதியதில் தமிழக இளைஞருக்கு நேர்ந்த சோகம்!
📅
📍 Thanjavur, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk