வடக்கு வாசல் - 6 | வலுக்கும் மண்ணின் மைந்தர்கள் கோஷம்.. மாற்றத்திற்குத் தயாராகும் கோவா?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
வடக்கு வாசல் - 6 | வலுக்கும் மண்ணின் மைந்தர்கள் கோஷம்.. மாற்றத்திற்குத் தயாராகும் கோவா?

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் கோவாவில் மெல்லிய குரலில் ஒலித்த அந்த மாற்றுக் குரல், இன்று மைய மண்டபத்தில் உரத்து ஒலிக்கிறது. 2021 கோவா சட்டமன்றத் தேர்தலில் புதிய வரவாக அமைந்த ஆர்.ஜி.பி கட்சி, தனிப்பெரும் மாநிலக் கட்சியாக பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ’புரட்சிகர கோயன்கள் கட்சி’ (RGP), என்று பெயரில் இடதுசாரி இயக்கங்களை ஞாபகப்படுத்தினாலும், இதுவொரு மண்ணின் மைந்தர்களுக்கான கட்சி. தமிழ்நாட்டின் நாம் தமிழர்போல், மண்ணின் மைந்தர்களான கோவா மக்களின் உரிமையை மீட்டெடுக்க தன்னார்வலர்களின் முயற்சியால் களமிறங்கிய அமைப்பு, பின்னாளில் கட்சியாக உருவெடுத்தது. கோவா வம்சாவளி நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வேலைவாய்ப்புகள், நில ஒதுக்கீடு, அரசு நல உதவித்திட்டங்களில் சிறப்பு ஒதுக்கீடு பெறுவதையும் நோக்கமாகக் கொண்டு தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை வகுத்துக்கொண்டது. 'நிஸ் கோயன்கர்கள்' (மண்ணின் மைந்தர்கள்) என்பது கோவா இளைஞர்கள் மத்தியில் கவர்ச்சிகரமான கோஷமாக உருவெடுத்துள்ளது. ஆர்.ஜி.பி கட்சி நிர்வாகிகளில் பலர் 'ஊழலுக்கு எதிரான இந்தியா' (IAC) இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். 2014க்கு பின்னர் ஊழல் எதிர்ப்பு கோஷங்கள் நீர்த்துப்போன பின்னர், கோவா மாநிலம் சார்ந்த உள்ளூர் பிரச்னைகளை கையிலெடுத்து, 2017-இல் தனி இயக்கம் கண்டார்கள். 2021-இல் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது. அடுத்து வந்த சில மாதங்களில் நடைபெற்ற தேர்தலில், 40 சட்டமன்றத் தொகுதிகளில் 38 இடங்களில் ஆர்.ஜி.பி கட்சி தனித்துப் போட்டியிட்டது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றாலும், பெரும்பாலான இடங்களில் பத்து சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றது. இதன்மூலம் தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்தது. தெற்கு கோவாவில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரே தொகுதியில் 28 வயதான போர்க்கர், ஆர்.ஜி.பியின் ஒரே பிரநிதிநிதியாக சட்டமன்றத்திற்குள் காலடி வைத்தார். மாற்றுச் சக்தியாக மக்கள் மத்தியில் அறிமுகமாகி, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் வெற்றி, அதிகாரத்தை நோக்கிய நகர்வுகள் என்று அடுத்தகட்டத்தை நோக்கிச் சென்றபோது கட்சிக்குள் கோஷ்டிப்பூசலும் தலையெடுத்துவிட்டது. ஆர்.ஜி.பி கட்சியின் நிறுவனர், மனோஜ் பார்ப். கோவாவைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி, சமூக ஆர்வலர் மற்றும் புவியியலாளர். 2022 சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜி.பி கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டவர். 2 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் 2 தொகுதிகளிலும் 20 சதவீதத்திற்கும் அதிகமாக, தேசியக்கட்சிகளுக்கு இணையான வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால், தேர்தல் அரசியலில் வாக்குகளைவிட வெற்றி முக்கியம்! தேர்தலில் தோற்றது, அரசியல் வாழ்க்கையில் அவருக்குப் பின்னடைவைத் தந்தது. அன்று முதல் கட்சியின் ஒரே சட்டமன்ற உறுப்பினரான வீரேஷ் போர்க்கருடனான மோதலும் ஆரம்பமானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்ட மனோஜ் பார்ப், பத்து சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று, தோல்வியைத் தழுவினார். பொதுவெளியில் வீரேஷ் போர்க்கரை விமர்சித்து மனோஜ் பார்ப் பேசவே, கட்சிக்குள் முதல் விரிசல் ஏற்பட்டது. போர்க்கரின் கட்சி விரோத நடவடிக்கைகளுக்கு விளக்கம் கேட்டு மனோஜ் பார்ப் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதுகுறித்து போர்க்கர் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில் இருவருக்கும் இடையேயான பனிப்போர், பகிரங்கமாகவே வெடித்தது. கோவாவின் 'நகர் மற்றும் கிராம அமைப்பு' சட்டத்தில் பாஜக அரசு, திருத்தம் செய்ய முடிவு செய்தபோது அதை எதிர்த்து ஆர்.ஜி.பி போராட்டடங்களை நடத்தியது. சர்ச்சைக்குரிய திருத்தத்தின் கீழ் விவசாய நிலங்கள், குன்றுகள் மற்றும் காடுகளை குடியிருப்பு மண்டலங்களாக மாற்றுவதற்கு அரசு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து வீரேஷ் போர்க்கர், 6 நாட்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். இதற்கு கட்சித் தலைமையின் ஒத்துழைப்பு இல்லை என்று கூறப்பட்டது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே ஆளுங்கட்சி நடந்துகொள்கிறது, அதற்கு தன்னுடைய கட்சியின் தலைமையும் துணை போகிறது என்று போர்க்கர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார். போர்க்கரின் உடல்நிலை மோசமடைந்ததாலும், பொதுமக்களின் எதிர்ப்பு தொடர்ந்ததாலும் பாஜக அரசு, நில மாற்ற உத்தரவைத் திரும்ப பெற்றது. கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட மனோஜ் பார்ப், ஆறு மாதங்களுக்கு முன்னர் கட்சித் தலைவர் பதவியையும், உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ததோடு, அரசியலில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்துள்ளார். கோவா அரசியலில் தேசியக்கட்சிகளின் தாக்கம் அதிகம். பாஜக தலைவரான மனோகர் பாரிக்கர் இருந்தவரை பாஜகவின் அசைக்கமுடியாத கோட்டையாக இருந்தது. அவரது திடீர் மறைவு கோவா அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்த நேரத்தில்தான் மாற்றுச் சக்தியாக ஏராளமான கட்சிகள் முளைத்தன. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு எதிரான மனநிலை மக்களிடையே இருந்துவரும் நிலையில் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் காங்கிரஸ் இல்லை. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டணி அமைக்கவும் காங்கிரஸ் கட்சியால் முடியவில்லை. கோவா அரசியல் என்பது கர்நாடகா, மகாராஷ்டிர அடையாள அரசியல் போன்று பழைய அரசியல் கணக்குகளை அடிப்படையாக கொண்டது. அதை ஆர்.ஜி.பி மாற்றியமைத்துள்ளது. கோவா சமூக கட்டமைப்பில் இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் செல்வாக்கு அதிகம். இந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாஜகவும், பிற இடங்களில் காங்கிரஸ் கட்சியும் சமபலத்துடன் நீண்டகாலம் செல்வாக்குடன் இருந்ததற்கு மத ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட வாக்குகள்தான் காரணம். ஆர்.ஜி.பியின் எழுச்சி, கோவாவாசிகள் என்கிற உணர்வை முன்வைத்து, பிற விஷயங்களை பின்னுக்கு தள்ளிவிட்டது. முதல் முறையாக கோவால் ஒரு மாநிலக் கட்சி, இந்து மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. இரு தரப்பின் ஆதரவையும் ஒருங்கே பெற்ற ஒரே கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. கோவா மாநிலத்தில் மாற்று அரசியலுக்கான தேவை தொடர்ந்து இருந்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் போன்ற வலுவான தேசியக்கட்சிகளின் போட்டிகளையும் மீறி டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவாலும், மேற்கு வங்கத்து மம்தா பானர்ஜியும் கோவாவில் கால்பதித்தார்கள். 2022 தேர்தலில் தேசியக் கட்சிகளுக்கு இணையாக அனைத்து இடங்களிலும் போட்டியிட்டார்கள். ஆம் ஆத்மி 6 சதவீத வாக்குகளைப் பெற்று, 2 இடங்களில் வெற்றி பெற்றது. திரிணமுல் காங்கிரஸ் கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெற முடியாவிட்டாலும் 5 சதவீத வாக்குகளைப் பெற்றது. தேசியக் கட்சிகளான காங்கிரஸ் 23 சதவீத வாக்குகளையும், பாஜக 33 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தன. அப்போது I-N-D-I-A கூட்டணி உருவாகாத நேரம். ஒருவேளை, கூட்டணியாக காங்கிரஸ், திரிணமுல், ஆம் ஆத்மி களம் கண்டிருந்தால் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும் என்று பேசப்பட்டது. 2027 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில், ஆர்.ஜி.பி கட்சிக்குப் பெரிய முக்கியத்துவம் கிடைத்துள்ளது. ஆர்.ஜி.பி, கோவாவின் முதல் மாநிலக் கட்சியாகப் பார்க்கப்படுகிறது. தேசிய அளவில் மாநிலக் கட்சிகளுக்கான முக்கியத்துவம் கூடிவரும் நிலையில் கோவா மாநிலத்திலும் வலுவான மாநிலக் கட்சிக்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. மாற்றுச் சக்தியாக தொடர்ந்து தன்னை முன்வைக்கும் ஆர்.ஜி.பி, எதிர்வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்.ஜி.பி கட்சிக்கு முன் உள்ள முக்கியமான சவால், கோஷ்டிப்பூசல்தான். 3 மாதங்களுக்கு முன்னர் கட்சியின் நிறுவனரான மனோஜ் பார்ப் விலகிய பின்னர், கட்சியின் ஒரே சட்டமன்ற உறுப்பினரான வீரேஷ் போர்க்கர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்சிகளைப்போல் ஆர்.ஜி.பி கட்சியின் அரசியல் செயல்பாடுகளும் பெரும்பாலும் இணையம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. சமூக வலைதளப் பதிவுகள் மூலம் மக்களை தொடர்புகொள்வதைத்தான் ஆர்.ஜி.பியும் பிரதானமாக முன்வைக்கிறது. இன்றைய நிலையில் வலுவான மூன்றாவது மாற்றுச் சக்தியாக ஆர்.ஜி.பி தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டதால் ஆளுங்கட்சியான பாஜகவுக்கு எதிரான வாக்குகளை கணிசமாகப் பிரித்தது. அது பாஜகவுக்கே சாதமாக அமைந்தது. அதேநிலை தொடர்ந்தால், அடுத்து வரும் தேர்தலிலும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புண்டு. பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறடிக்கப்பட்டதன் காரணமாகவே கோவாவை பாஜகவால் தக்க வைத்துக்கொள்ள முடிகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில்கூட எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமையில்லாத காரணத்தால் பாஜகவின் வெற்றி யாத்திரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் முன்னெடுத்த கூட்டணி முயற்சிகள் தோற்றுப்போனதுற்கு ஆர்.ஜி.பியிடமிருந்து ஒத்துழைப்பு இல்லாததுதான் காரணம். ஆர்.ஜி.பி, தனித்துப் போட்டியிடவே விரும்புகிறது. ஒருவேளை, காங்கிரஸ் & பாஜக தவிர்த்து ஒரு கூட்டணியை முன்னெடுத்தால் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. சொந்த மாநிலங்களில் கடுமையான அரசியல் வீழ்ச்சியை சந்தித்து வரும் மம்தா பானர்ஜியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் கூட்டணிக்கு முன்வரக்கூடும். 10 சதவீத வாக்கு வங்கியை கைவசமும் வைத்துள்ள ஆர்.ஜி.பி, கூட்டணியாக தேர்தலை அணுகினால் 20 சதவீத வாக்குகளை கடக்கக்கூடும் என்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு எதிரான அலை உருவாகியுள்ள நிலையில், 20 சதவீத வாக்குகள் என்பது தேர்தல் முடிவுகளை தலைகீழாக மாற்றியமைக்க கூடும் என்கிறார்கள். ஆனால், கோஷ்டிப்பூசலில் சிக்கியுள்ள ஆர்.ஜி.பி, கட்சியை பலப்படுத்தி வலுவான கூட்டணியை கட்டமைத்தால் மட்டுமே அது சாத்தியம். ஆர்ஜி.பியின் நிறுவனரான மனோஜ் பார்ப் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தாலும், அவர் பாஜகவில் இணையக்கூடும் என்று செய்திகள் வந்தன. அதே நேரத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ் என அனைத்து கட்சிகளிடமிருந்தும் அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஓருவேளை, அரசியலில் அவர் அதிரடியாக ஏதாவது முடிவெடுத்தால் பார்க்கர் vs பார்ப் என்று இரு துருவ அரசியலை நோக்கி நகரக்கூடும். ஆனால், பாஜக இவற்றையெல்லாம் சர்வ நிச்சயமாக ரசிக்காது என்பது மட்டும் நிச்சயம். இந்த தொடரின் முந்தையப் பகுதியைப் படிக்க: வடக்கு வாசல் - 5 | இமாச்சலை இறுக்கும் நிதி நெருக்கடி.. தள்ளாடும் காங்கிரஸ்.. தலைநிமிரும் பாஜக! (வடக்கு வாசல் திறக்கும்..)

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை