திருவாரூர்: தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் எனப்படும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்திருக்கிறது. கர்நாடகா உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததால், நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டு அரசி விலை உயர்ந்திருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்படும் இடம்தான் இந்த ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம். நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் இதை சேர்த்துதான் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் என்று சொல்வார்கள். ஆனால், தற்போது இங்கு அரிசி விலை எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. என்னதான் நிலம் இருந்து அதில் நெல் பயிரிட்டாலும், பெரும்பாலான மக்களால் காசு கொடுத்து அரிசியை வாங்கி சாப்பிட முடிவதில்லை. விவசாயிகளில் பலர் இன்றும் ரேஷன் அரிசியைதான் சாப்பிடுகின்றனர். காரணம் கடை அரிசியின் விலை அதிகம் என்பதுதான். இப்படி இருக்கையில் தற்போது கிலோவுக்கு ரூ.30 அதிகரித்திருக்கிறது என்பது, இனி இவர்களால் கடை அரிசியையே வாங்க முடியாது என்கிற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக திருவாரூரில் அரிசியின் விலை கிலோ ரூ.60லிருந்து ரூ.90 என உயர்ந்திருக்கிறது. பொன்னி அரிசி விலை கிலே ரூ.20 அதிகரித்து ரூ.85க்கும், இட்லி அரிசி கிலோ ரூ.10 அதிகரித்து தற்போது ரூ.50க்கும், நாட்டு பொன்னி ரூ.20 அதிகரித்து ரூ.90க்கும், ஐஆர்20 அரிசி ரூ.10 உயர்ந்து ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 50 நாட்களில் மட்டும் 3 முறை அரிசியின் விலை உயர்ந்திருக்கிறது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்பு உள்ளாகின்றனர். "நாங்கள்தான் நெல்லை உற்பத்தி செய்கிறோம். இங்கிருந்துதான் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அரசி போகிறது. ஆனால், எங்களுக்கே இங்கு தரமான அரிசி கிடைப்பதில்லை. விவசாய தொழிலாளியான நாங்கள் இன்னமும் ரேஷன் அரிசியைதான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களால் காசு கொடுத்து அரிசி வாங்க முடியல. நம்மூருல விளையும் அரிசியை விட பெங்களூர் பிராண்ட அரிசியைதான் அதிகம் பாக்க முடியுது. சாவித்திரினு ஒரு பெங்களூர் பிராண்ட்.. ரேட்டும் கம்மி. ஆனா, நம்மூர் அரிசி கேட்டா ரேட் அதிகம். மேட்டூர் தண்ணி இல்லாததால.. இந்த முறை குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவுக்கு இல்ல. அப்படியும் மீறி அறுவடை செய்யுற அரிசியை வித்தாதான் எங்களுக்கு பொழப்பு பாக்க முடியும். அதை சாப்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. ரேஷன் அரிசியலதான் வாழ்க்கை ஓடுது" என்று மக்கள் புலம்புகிறார்கள். இதற்கு காரணம், சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்காததுதான் என்று டெல்டா மக்கள் கூறுகிறார்கள். அணையை திறந்திருந்தால் இந்நேரத்திற்கு குறுவை சாகுபடி அறுவடைக்கு ரெடியாகியிருக்கும். ஆனால், கர்நாடகாவிலிருந்து போதுமான நீர் உரிய நேரத்தில் கொடுக்கவில்லை. அதை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கறாராக கேட்டு வாங்கவில்லை. இந்த காரணத்தால்தான் தற்போது அரசி விலை உயர்ந்திருக்கிறது என்று மக்கள் கூறுகின்றனர். ஊருக்கே சோறு போடும் விவசாயிகளால்.. ஒருவேளை சோற்றை கூட நிம்மதியாக சாப்பிட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சனையில் தீர்வு காண வேண்டும் என்று டெல்டா மக்கள் வலியுறுத்துகின்றனர்.
நெல் உற்பத்தியாகும் டெல்டாவில் எகிறிய அரிசி விலை! விஜய் அரசு கண்டுக்கல.. கொந்தளிக்கும் மக்கள்!
📅
📍 Thanjavur, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk