பட மூலாதாரம், Getty Images தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கருத்து வேறுபாடு கொண்டதிலிருந்து பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன; ஆனால், 'துடிப்பான ஜனநாயகம்' ஒன்றில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது மிகவும் இயல்பான ஒன்று என்று ஆளும் பாஜக தரப்பு கூறுகிறது. இந்த விவகாரம் முழுவதுமே, எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின் படியே மேற்கொள்ளப்பட்டன என்று தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையர்களுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது ஒன்றும் புதியதல்ல; ஆனால், இந்த முறை இது இதுவரை இல்லாத அளவுக்குப் பேசப்படும் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடைமுறையானது இந்த மூன்று தேர்தல் ஆணையர்களின் மேற்பார்வையில் தான் கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும், முன்னணி ஆங்கில நாளிதழான 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்டுள்ள செய்தியின்படி, சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி கடந்த 10 மாதங்களில் முறையான பதிவுகளில் குறைந்தது 14 முறை தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். பல முடிவுகளும் உத்தரவுகளும் தங்களுக்குத் தெரியாமலேயே எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகவும், ஒரு நாளில் இது போன்ற நான்கு எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த மூன்று தேர்தல் ஆணையர்களும் மோதி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்தான், 2023 ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான தேர்வுக் குழுவில் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். முன்னதாக, தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உள்துறை அமைச்சருக்குப் பதிலாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தார்; ஆனால், மோதி அரசு அந்த விதியை மாற்றிவிட்டு, தலைமை நீதிபதிக்குப் பதிலாக உள்துறை அமைச்சரை நியமித்தது. மோதி அரசின் இந்த முடிவு மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. புதன்கிழமை (செப்டம்பர் 23) அன்று, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா, அரசாங்கத்தின் இந்த முடிவு பொதுமக்களுக்குத் தவறான செய்தியை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுக்பீர் சிங் சந்து மற்றும் ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டபோது, அக்குழுவில் இடம்பெற்றிருந்த எதிர்க்கட்சி உறுப்பினரான காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, இந்த நியமன நடைமுறைக்கு எதிராகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். End of அதிகம் படிக்கப்பட்டது 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகவும், விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டபோது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தனது மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதாவது, மோதி அரசாங்கம் தனது விருப்பப்படி தேர்தல் ஆணையர்களாக நியமித்த விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகிய இரண்டு அதிகாரிகளுமே, ஞானேஷ் குமாரின் முடிவுகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். பட மூலாதாரம், Getty Images தேர்தல் ஆணையராகப் பதவியேற்பதற்கு முன்பாக, விவேக் ஜோஷி ஹரியாணா மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர்; அதேசமயம் சுக்பீர் சிங் சந்து முன்னதாக உத்தராகண்ட் மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர் ஆவார். சந்துவின் தலைமைச் செயலாளர் பதவி காலம் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைந்த நிலையில், 2024ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். விவேக் ஜோஷி 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் இணைந்தபோது ஹரியாணா மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பதவியில் இருந்தார். விவேக் ஜோஷி, ஹரியாணாவை சேர்ந்த 1989ஆம் ஆண்டுப் பிரிவு ஐஏஎஸ்அதிகாரியாவார். அவர் ரூர்க்கி ஐஐடி-யில் (அப்போது ரூர்க்கி பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது) மெக்கானிக்கல் பொறியியல் பயின்றவர். இதனைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள ஐஐஎஃப்டி-யில் (IIFT) பன்னாட்டு வணிகத்தில் நிர்வாக முதுநிலைப் பட்டமும், ஜெனீவாவில் உள்ள கிராஜுவேட் இன்ஸ்டிடியூட்டில் பன்னாட்டுப் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சுக்பீர் சிங் சந்து, உத்தராகண்ட் கேடரைச் சேர்ந்த 1988 ஆம் ஆண்டுப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். பஞ்சாப்பைப் பூர்வீமாகக் கொண்ட இவர், அமிர்தசரஸ் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். சுக்பீர் சிங் சந்து வகித்த முந்தைய முக்கியப் பதவிகள்: பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் செய்தியின்படி, சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தங்களது பணிச்சுமைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து அமைச்சரவை செயலாளருக்குத் தனித்தனியாகக் கடிதம் எழுதியிருந்தனர். இந்த மாற்றங்கள், வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப அமைப்பின் கண்காணிப்பைப் பாதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமைச்சரவை செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கான மேற்பார்வை அதிகாரியாக இருந்தாலும், ஆணையத்துக்குள் நிலவும் இப்பிரச்னை குறித்துக் கடிதம் எழுதியது ஒரு அசாதாரண நிர்வாக நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்துக்குள் ஏற்படும் கருத்து வேறுாடுகளைத் தீர்ப்பதற்கான சட்டப்பூர்வ வழிமுறை, ஆணையத்தின் முடிவின் மூலமே சாத்தியமாகும். வழக்கமாக இத்தகைய முடிவுகள் ஒருமனதாகவோ அல்லது தேவைப்படும் பட்சத்தில் பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் 324-வது பிரிவின்படி, தேர்தல்களை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம் போன்றவை தேர்தல் ஆணையத்திடம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையரும் தேர்தல் ஆணையர்களும் அங்கம் வகிக்கின்றனர். தலைமைத் தேர்தல் ஆணையர் பொதுவாக "சமமானவர்களில் முதலாமவர்" (first among equals) என்ற நிலையில்தான் கருதப்படுகிறாரே தவிர, தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரமும் கொண்டவர் அல்ல. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் அலுவலகக் காலம்) சட்டம், 2023 இன் பிரிவு 18-ன் படி: பணி ஒதுக்கீடு ஆணை தங்கள் ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டதாக விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து கருதினால், அந்த விவகாரத்தை முறையாக மூன்று பேர் கொண்ட ஆணையத்தின் முன் வைக்கக் கோருவதும், தங்களது எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் முடிவு பெறக் கோருவதும் வழக்கமான வலுவான நடவடிக்கையாக இருந்திருக்கும். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியின்படி, இருவருடைய எழுத்துப்பூர்வமான எதிர்ப்புகளின் நகலைத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் அனுப்பியுள்ளனர். மேலும், கடந்த நான்கு மாதங்களில் முதல்முறையாக இந்த மூன்று தேர்தல் ஆணையர்களும் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. பட மூலாதாரம், @INC சுக்பீர் சிங் சந்து அல்லது விவேக் ஜோஷி ஆகியோர் இந்தப் பதவிக்குத் தனிப்பட்ட முறையில் தகுதியற்றவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் காங்கிரஸ் எதிர்க்கவில்லை; மாறாக, அவர்களின் நியமன நடைமுறை மற்றும் தேர்வுக்குழுவின் கட்டமைப்பு குறித்தே காங்கிரஸ் தரப்பு தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது. காங்கிரஸின் பிரதான வாதம், இந்தத் தேர்வு முறை மத்திய அரசுக்குக் குழுவில் ஒரு பெரும்பான்மை பலத்தை வழங்குவதோடு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இதில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளார் என்பதுதான். சுக்பீர் சிங் சந்து நியமனம் குறித்த எதிர்ப்பு 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சுக்பீர் சிங் சந்து மற்றும் ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டபோது, மூன்று பேர் கொண்ட தேர்வுக் குழுவில் எதிர்க்கட்சிப் பிரதிநிதியாக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ஒரு மாறுபட்ட குறிப்பைத் தாக்கல் செய்தார். அவரது முக்கியக் குற்றச்சாட்டுகள்: இறுதிப் பட்டியலின் ஆறு பெயர்கள் கூட்டம் தொடங்குவதற்கு வெறும் 10 நிமிடங்களுக்கு முன்புதான் பகிரப்பட்டன என்றும், 212 பெயர்கள் அடங்கிய முழுப் பட்டியல் கூட்டத்துக்கு முந்தைய நாள் மட்டுமே வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். இதனால், குறுகிய காலத்தில் இறுதிசெய்யப்பட்ட வேட்பாளர்களைப் பற்றி முறையாகச் சரிபார்த்து ஆராய்வதற்கான போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றார். தேர்வுக் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக, பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சரை உள்ளடக்கிய 2023 ஆம் ஆண்டுச் சட்டத்துக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். குழுவில் பிரதமரும், அவரால் நியமிக்கப்படும் அமைச்சரும் இடம்பெறுவது அரசாங்கத்துக்கு 2-1 என்ற பெரும்பான்மையை வழங்கிவிடுவதால், அரசுக்குச் சாதமான வேட்பாளர்களைத் தங்களுக்குத் தேவையானபடி தேர்ந்தெடுக்க வழிவகுக்கிறது என்று ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வாதிட்டார். அதேசமயம், சுக்பீர் சிங் சந்துவின் நியமனத்தைத் தான் தன்னிச்சையானது என்று கூறவில்லை என்றும், நடைமுறைக் குறைபாடுகளையும் தேர்வு அமைப்பின் கட்டமைப்பையும்தான் தான் எதிர்ப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். விவேக் ஜோஷி நியமனம் குறித்த எதிர்ப்பு 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட அதே நாளில்தான் ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது மாறுபட்ட கருத்தைக் கொண்ட குறிப்பைச் சமர்ப்பித்திருந்தார். ராகுல் காந்தியின் வாதங்கள்: 2023 ஆம் ஆண்டு நியமனச் சட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்ற விசாரணை 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று நடைபெறவிருந்த நிலையில், அரசு அவசரமாக இந்த நியமன நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக ராகுல் காந்தி அதில் குறிப்பிட்டிருந்தார். நீதிமன்றம் அந்தச் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மையையும் தேர்வுக் குழுவின் அமைப்பையும் பரிசீலிக்கும் வரை அரசு தனது நியமன நடவடிக்கைகளைத் தள்ளி வைத்திருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். அரசாங்கத்தின் இந்த முடிவு நீதிமன்றத்துக்கும் அரசியலமைப்பு நிறுவனங்களுக்கும் எதிரானது என்றும், இது மிகவும் "அவசரமானதாகவும்" "மரியாதையற்றதாகவும்" அமைந்திருப்பதாக அவர் வர்ணித்தார். நிர்வாகத்தின் செல்வாக்கிலிருந்து தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அரண்களை, தேர்வுக் குழுவிலிருந்து தலைமை நீதிபதி நீக்கப்பட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் 'அனூப் பர்ன்வால்' தீர்ப்பையும் காங்கிரஸ் சுட்டிக்காட்டியது. நாடாளுமன்றம் முறையான சட்டம் இயற்றும் வரை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவே இடைக்கால ஏற்பாடாக இருக்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
தலைமை தேர்தல் ஆணையருடன் முரண்பட்ட இரு ஆணையர்கள் யார்? அவர்களின் நியமனத்தை காங்கிரஸ் எதிர்த்தது ஏன்?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk