மின்சார கட்டண உயர்வைச் சுற்றிய சர்ச்சையால், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் புதிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது. பணியாளர் பற்றாக்குறையால், ஓய்வுபெற்ற பணியாளர்களுடன் தனியார் நிறுவன ஊழியர்களையும் ஒப்பந்த அடிப்படையில் கணக்கெடுப்புக்கு நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடுகளுக்கு வழக்கத்தை விட அதிக அளவில் மின்சார கட்டணம் வந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் புகார்களை முன்வைத்தனர். ஆனால், மின் நுகர்வு அதிகம் இருப்பதாலேயே மின் கட்டணமும் அதிகரித்திருப்பதாக மின்வாரியம் தரப்பில் கூறப்படுகிறது. அதேவேளையில், மின் கணக்கீட்டு குளறுபடிகளாலும் காலதாமதத்தாலும் மின்கட்டணம் கணிசமாக உயர்ந்துவிட்டதாகப் பொதுமக்கள் தரப்பில் தொடர்ச்சியாகப் புகார்கள் குவிந்து வருகின்றன. இது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மின்சாரத்துறையே இதுகுறித்து அறிக்கை வெளியிடடிருந்தது. அதில் மின் கட்டணம் வழக்கத்திற்கு மாறாக உயர்ந்திருப்பதாக நுகர்வோர் புகார் தெரிவித்தால் அந்த பில்லை ரத்து செய்துவிட்டு மீண்டும் சரி பார்க்க வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் கணக்கீட்டாளர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளதே இப்படி திடீரென மின்சார கட்டணம் அதிகரித்ததற்கு காரணமாக கூறப்பட்டது. இப்படி பணியாளர்கள் பற்றாக்குறையால், ஓய்வுபெற்ற பணியாளர்களும் மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த நிலையில், கணக்கீட்டுப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வதற்காக ஆறு மாத காலத்திற்குத் தற்காலிகமாகத் தனியார் நிறுவனங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கத் தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகம் அதிரடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்த பணிகளை, அடுத்த மாதம் முதல் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணிக்காக, தற்போது ஒரு இணைப்புக்கு 5 ரூபாய் ஊதியத்தில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பணியாளர்கள் பணியில் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள் மூலம் களமிறக்கப்படும் ஊழியர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என்றும், அவர்கள் மொபைல் செயலி மற்றும் புளூடூத் கருவிகள் மூலம் நுகர்வோர் இடங்களுக்கே சென்று துல்லியமாக அளவீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சி என மின்சார ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தனியார் மூலம் மின் கணக்கெடுப்பு: வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு | தனியார்மயம் என ஊழியர்கள் எதிர்ப்பு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk