மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2014-2015 காலகட்டத்தில் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய ஹவுதி அமைப்பு ஏமனின் தலைநகரான சனா (Sanaa) உள்ளிட்ட பெரும்பாலான வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றியது. இந்த ஹவுதி அமைப்பிற்கு ஈரான் அரசு நிதி, ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாகக் கூறப்படும் நிலையில், 2015-இல் ஏமன் அரசுக்கு ஆதரவாகச் சவூதி அரேபியா தலைமையான கூட்டுப் படைகள் களமிறங்கின. எனினும் ஹவுதிகளின் எழுச்சியை இந்தக் கூட்டுப் படைகளால் தடுக்க முடியவில்லை. இந்தச் சூழலில் சமீபத்தில் சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் சுமந்து செல்லும் கப்பல்கள் மீதும், எரிவாயுக் குழாய்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர். அதிலும் குறிப்பாக, சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களும் ஹவுதிகளுக்கு இலக்கானது. இரு நாட்களுக்கு முன்னர்கூட சவூதி அரேபிய வான் பாதுகாப்பு அமைப்பு ஹவுதிகள் ஏவிய பல ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வான்வழியிலேயே இடைமறித்து அழித்தது. இதன் காரணமாக, ஏமன் முழு அளவிலான போரை மேற்கொள்ளும் நிலைக்கு சவூதி அரேபியா வந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. ஹவுதிகளின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து சவூதி அரேபியாவிற்கு ஆதரவாக, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அவசரக் கூட்டம் நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் ஏமன் மீது போர் தொடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஹவுதி அமைப்பினரை அதிகாரத்தில் இருந்து அகற்றும் வரை, அவர்களை எதிர்த்துப் போராடவும் தேவைப்பட்டால் உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக இருக்குமாறு சவூதி அரேபியாவின் தலைமை மதகுரு ஷேக் சலே பின் ஃபவ்சான் (Sheikh Saleh bin Fawzan Al-Fawzan) ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், சவூதி எல்லைகளையும், புனித தலங்களான மெக்கா மற்றும் மதினாவையும் பாதுகாப்பது மிகப்பெரிய மதக் கடமையாகும். இதற்காகத் தேவைப்பட்டால் உயிர்த்தியாகம் செய்யவும் ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் ஒரு மதகுரு இதுபோன்ற தீவிரமான அழைப்பை விடுப்பது என்பது, அரசு மற்றும் ராணுவம் ஹவுதிகளுக்கு எதிராக ஒரு மிகப் பெரிய நேரடி ராணுவ நடவடிக்கையைதொடங்குவதற்கான மதரீதியான ஒப்புதலாகவே பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் மத்திய கிழக்கில் மற்றொரு போர் தொடங்க வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
'உயிர்த்தியாகம் செய்யவும் தயார்..' அதிர்ச்சி கொடுத்த சவூதி அரேபியா.. மத்திய கிழக்கில் அடுத்த போரா?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk