பட மூலாதாரம், Future Publishing via Getty Images பல தசாப்தங்களாக, இமயமலையின் சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள பாகிஸ்தான்-சீனா எல்லையை இந்தியா அங்கீகரிக்க மறுத்து வருகிறது. அந்தப் பகுதியை இந்தியா தனது சொந்த நிலப்பரப்பாகக் கோருகிறது. ஆனால் கடந்த வாரம் அந்த மலைப்பாங்கான பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதியில் பாகிஸ்தானும் சீனாவும் தங்களது எல்லையை முறைப்படுத்தின. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளும் பாகிஸ்தான் - சீனா எல்லை கூட்டு ஆணையம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தை "முக்கிய மைல்கல்" என்று பாகிஸ்தான் விவரித்தது. எல்லை நிர்வாகம், வர்த்தகம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துவதில் இது முக்கிய முன்னேற்றம் என பாகிஸ்தான் இதனை வர்ணித்தது. ஆனால், இந்த நடவடிக்கைக்கு எந்தவித சட்ட அடிப்படையும் இல்லை என்று இந்தியா நிராகரித்துள்ளது. இந்தியா உரிமை கோரும் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான்-சீனா எல்லை எதையும் அங்கீகரிக்கவில்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நேரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பல ஆண்டுகளாக நீடித்த மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பாக ராணுவப் பதற்றத்துக்குப் பிறகு, இந்தியாவும் சீனாவும் தங்களது உறவை நிலைப்படுத்த முயன்று வருகின்றன. அதே வேளையில், இந்தியாவும் உரிமை கோரும் மற்றொரு எல்லைப் பகுதியில் சீனாவும், பாகிஸ்தானும் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன. End of அதிகம் படிக்கப்பட்டது "பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே எந்த எல்லையும் இல்லை. எந்தச் சட்ட அடிப்படையும் இல்லாத இந்தப் பெயர் அளவிலான கூட்டு ஆணையத்தை இந்தியா நிராகரிக்கிறது," என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். பட மூலாதாரம், Corbis via Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இந்தக் கூட்டு எல்லை ஆணையமானது, ஷாக்சகம் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பாகிஸ்தான்-சீனா எல்லைப் பகுதியைப் பற்றியதாகும். இது சுமார் 5,180 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு நிலப்பரப்பாகும். 1963-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இதனைச் சீனாவுக்கு வழங்கியது. ஆனால், இந்தியா இதனைத் லடாக் உள்ள தனது பிராந்தியத்தின் ஒரு பகுதி என உரிமை கோருகிறது. இந்த நிலப்பரப்பு முன்னாள் ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்றும், பாகிஸ்தான் இதனை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, பின்னர் சீனாவிடம் ஒப்படைத்ததாகவும் இந்தியா கூறுகிறது. இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. மேலும் இதனைச் சட்டவிரோதமானது மற்றும் செல்லுபடியாகாதது என்றும் கருதுகிறது. இந்த வரலாற்றுப் பின்னணியே புதன்கிழமை வெளியான அறிவிப்பின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. "சட்டவிரோதமாகவும் பலவந்தமாகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்தியப் பகுதி தொடர்பாக எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்வதற்குப் பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை," என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பகுதியாகவே உள்ளது என்று பாகிஸ்தான் கூறுகிறது. எனவே, 1963ஆம் ஆண்டு சீனாவுடன் செய்த எல்லை ஒப்பந்தத்தை கேள்விக்குள்ளாக்க இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அது வாதிடுகிறது. அந்த ஒப்பந்தத்தை செல்லுபடியானதாகவே பாகிஸ்தான் கருதுகிறது. டெல்லியின் ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் ஆட்சி முறைகள் துறையின் பேராசிரியரான ஜபின் டி ஜேக்கப், இந்த புதிய நகர்வு என்பது ஒரு புதிய ஏற்பாடு என்பதை விட, ஒரு பழைய அமைப்பை மீண்டும் புதுப்பிப்பதே ஆகும் என்று கூறினார். "1963-ஆம் ஆண்டின் சீனா-பாகிஸ்தான் ஒப்பந்தத்திலேயே கூட்டு எல்லை ஆணையத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஒரே கேள்வி, அது செயல்படுத்தப்பட்ட நேரத்தைப் பற்றியதுதான்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்ததற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறினார். அவற்றில், சீனா தனது எல்லைகளை வரையறுக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இதை மேற்கொண்டிருக்கலாம் என்பதும், பாகிஸ்தானின் பிற எல்லைப் பகுதிகளில் மோதல்களும் நிலையற்ற சூழலும் நிலவும் நிலையில், இந்த எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்பு மற்றும் மக்களின் நடமாட்டத்தை முறைப்படுத்தும் நோக்கம் இருக்கலாம் என்பதும் அடங்கும் என்கிறார் அவர். பட மூலாதாரம், Getty Images இது குறித்து இந்தியா "கவலைப்பட வேண்டும்" என்று ஜேக்கப் கூறினார். அதைவிட முக்கியமாக, இந்த நடவடிக்கை 1963-ஆம் ஆண்டின் ஒப்பந்தத்திலேயே உள்ள ஒரு விதியைப் புறக்கணிப்பதாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட்டு, நிலப்பரப்பு இறுதியாக எந்த நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறதோ, அந்த நாட்டுடன் இந்த ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒப்பந்தத்தின் 6-வது பிரிவு வழிவகை செய்திருந்தது என்று ஜேக்கப் சுட்டிக்காட்டினார். இந்தியாவைப் பொறுத்தவரை, சர்வதேச ஊடகச் சூழல் காரணமாக இந்தச் சவாலானது மேலும் சிக்கலாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்தியாவை ஒப்பிடும்போது, சர்வதேச ஊடகங்கள் மற்றும் தகவல்தொடர்பு தளங்களில் (சிஜிடிஎன், சிஆர்ஐ மற்றும் சமூக ஊடகப் பங்களிப்புகள் மூலம்) சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இது சர்வதேச அளவில் தனது தரப்பு கண்ணோட்டத்தையும் வரைபடங்களையும் முன்வைக்க சீனாவிற்கு உதவுகிறது. ஆனால் இந்தியாவின் எதிர்ப்புக் குரல்கள் பிற உலக நாடுகளால் புறக்கணிக்கப்படவே வாய்ப்புள்ளது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம், AFP via Getty Images எல்லைப் பகுதியின் நடைமுறை மேலாண்மை என்பதைத் தாண்டி இந்த விவகாரம் வேறுபட்ட கவலையை ஏற்படுத்துகிறது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் மற்றும் காரகோரம் நெடுஞ்சாலை உள்பட இந்தப் பிராந்தியம் முழுவதிலும் பாகிஸ்தானும் சீனாவும் ஏற்கெனவே பரந்த உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு வழிகளைக் கொண்டுள்ளன. அமெரிக்காவிற்கான முன்னாள் பாகிஸ்தான் தூதரும், தற்போது அன்வர் கர்காஷ் உத்திசார் ஆய்வகம் மற்றும் ஹட்சன் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளருமான உசேன் ஹக்கானி, இந்தப் புதிய கூட்டு ஆணையம் நடைமுறை சார்ந்ததாகவும் அரசியல் சார்ந்ததாகவும் இருக்கிறது என்றார். "இது இரண்டின் கலவையாகும்" என்று பிபிசியிடம் கூறிய ஹக்கானி, "எல்லைக் கூட்டுறவை மேம்படுத்துவதற்கும், சட்டவிரோத ஊடுருவல்களைத் தடுப்பதற்கும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்துடன் தொடர்புடைய உத்திசார் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்குமான அமைப்பாக இது செயல்படும்." என்றார். மேலும், காஷ்மீர் விவகாரத்தை சீனா தொடர்ந்து பாகிஸ்தானின் கோணத்திலேயே பார்க்கிறது என்பதை இந்தியாவிற்கு உணர்த்தும் எச்சரிக்கையாகவும் இது அமைகிறது என்று அவர் கூறினார். "காஷ்மீர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை சீனா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் கில்கித்-பல்டிஸ்தானை இந்தியா தனது நிலப்பரப்பின் ஒரு பகுதியாக உரிமை கோரினாலும், சீனா அதனை பாகிஸ்தானின் கோணத்திலிருந்தே பார்க்கிறது," என்று ஹக்கானி குறிப்பிட்டார். "ஜம்மு-காஷ்மீரின் இறுதி நிலை இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்ற நிலைப்பாட்டையே பாகிஸ்தான் தொடர்ந்து வகிக்கிறது. இருப்பினும், இந்தியா ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370) ரத்து போன்ற உள்நாட்டு மாற்றங்களைச் செய்துள்ளதால், 1963ஆம் ஆண்டு முதல் சீனாவுடன் நடைமுறையில் இருந்துவரும் நிலையை முறைப்படுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று பாகிஸ்தான் கருதுகிறது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம், Anadolu Agency/Getty Images சீனாவைப் பொறுத்தவரை, இந்த புதிய ஏற்பாடானது, இந்தியாவின் மீதான தனது நிலைப்பாட்டை நிர்வகிக்கவும், அதை உணர்த்தவும் அண்டை நாடுகளுடனான தனது உறவுகளைப் பயன்படுத்தும் பரந்த நடைமுறையின் ஒரு பகுதியாகும். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் உறுதிமொழி, சீனாவிற்கு உத்திசார் ரீதியாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஹக்கானி கூறினார். "உத்தி ரீதியாகப் பார்த்தால், இது பாகிஸ்தானுடனான உறவை மேலும் ஆழமாக்குகிறது. புவிசார்-உத்தி ரீதியாக, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளாலும் ஒரே நேரத்தில் இருமுனை அச்சுறுத்தல் ஏற்படும் என்ற இந்தியாவின் அச்சத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது. இது பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சியளிப்பதோடு சீனாவுக்கும் பயனளிக்கிறது." இந்த அறிவிப்பு வெளியான நேரமும் மிகவும் முக்கியமானது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். "சீனா எப்போதும் தனது முடிவுகளை பல மாதங்களுக்கு முன்பே, ஏன் சில ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடுகிறது. எனவே, இந்தக் கூட்டு எல்லை ஆணையத்தை நடைமுறைப்படுத்தும் முடிவு சில காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்," என்கிறார் ஹக்கானி. "அதிபர் ஷி ஜின்பிங்கின் சமீபத்திய பிரிக்ஸ் உச்சிமாநாட்டுப் பயணத்திற்குப் பிறகு இந்தத் தகவல் வெளியிடப்பட்ட நேரம் முக்கியமானது. பாகிஸ்தானுடனான உத்திசார் கூட்டாண்மையை உறுதிப்படுத்தும் செய்தியை அந்நாட்டிற்கு அனுப்பவும், பன்முக அமைப்புகளில் ஒன்றிணைந்து செயல்படுவது தெற்காசியாவிற்கான சீனாவின் பார்வையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதை இந்தியாவிற்கு நினைவூட்டவும் இந்த நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது." இருப்பினும், இந்த நடவடிக்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் இந்தியாவிற்கு எதிரான நேரடி ராணுவ நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது என்று ஜேக்கப் எச்சரித்தார். "தற்போதைக்கு, மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் இதற்கான உடனடி அல்லது வெளிப்படையான தாக்கங்கள் எதுவும் இல்லை," என்று அவர் கூறினார். கடந்த வார அறிவிப்பின் முக்கியத்துவம், விவாதத்திற்குரிய இமயமலை எல்லையில் ஏற்படும் உடனடி மாற்றத்தை விட, இந்தியா தொடர்ச்சியாக நிராகரித்து வரும் ஏற்பாடுகளை படிப்படியாக சட்டப்பூர்வமாக்கி வருவதிலேயே அடங்கியுள்ளது என்பதை இது காட்டுகிறது. இந்தியாவின் நிலைப்பாடு "தெளிவாகவும் சீராகவும்" உள்ளது என்று வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். "இந்தியாவின் நிலப்பரப்பை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதைச் சட்டப்பூர்வமாக்கும் எந்தவொரு முயற்சியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் அது இந்தியாவின் இறையாண்மையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது," என்றும் அவர் கூறினார். ஆனால், இந்தச் சர்ச்சை எல்லைகளின் சட்டப்பூர்வ அம்சங்களைத் தாண்டியது என்று ஹக்கானி நம்புகிறார். "எல்லை குறித்த இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முக்கிய கருத்து வேறுபாடு புவிசார்-உத்தி அடிப்படையிலானதே தவிர, வரைபடம் சார்ந்தது அல்ல" என்று அவர் கூறினார். "எனவே, எல்லைப் பேச்சுவார்த்தைகள் மற்றும் எல்லை மேலாண்மை அமைப்புகளால் எட்டக்கூடிய முடிவுகளுக்கு ஒரு எல்லை உண்டு." இந்தியாவுக்கு எதிரான சீனாவின் "இரண்டாம் நிலை தடுப்புச் சக்தியாக" பாகிஸ்தான் தொடர்ந்து செயல்படும் என்றும், பாகிஸ்தானுடனான சீனாவின் ஈடுபாடு இந்தியாவுக்கு அந்தச் செய்தியைத் தொடர்ந்து உணர்த்தும் என்றும் ஹக்கானி கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
பாகிஸ்தான் - சீனா புதிய எல்லை ஒப்பந்தம்: இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk