அழிவின் விளிம்பில் 49,500 உயிர்கள்.. அதிகம் பாதிக்கப்பட்டது எவை? எச்சரிக்கும் IUCN Red List!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
அழிவின் விளிம்பில் 49,500 உயிர்கள்.. அதிகம் பாதிக்கப்பட்டது எவை? எச்சரிக்கும் IUCN Red List!

மனிதன் இந்தப் பூமியில் பிறப்பதற்கு முன்பே இங்கே வாழ்க்கை இருந்தது. அடர்ந்த காடுகளின் இருளுக்குள் நடந்த விலங்குகளும், மரக்கிளைகளில் கூடு கட்டிப் பாடிய பறவைகளும், மண்ணுக்குள் ஊர்ந்த சிற்றுயிர்களும், கடலின் ஆழத்தில் நீந்திய உயிரினங்களும் சேர்ந்து இந்தப் பூமியை உயிரோட்டமுள்ளதாக்கின. காலையில் எழுந்தவுடன் வீட்டைச் சுற்றிக் கேட்கும் பறவைகளின் சத்தம், ஒரு மரத்தின் நிழலில் நாம் இளைப்பாறும்போது, அதன் கிளையில் அமரும் ஒரு பறவை, மழைக்குப் பிறகு துள்ளிக்குதிக்கும் தவளை, மரத்தின் உச்சியில் அமர்ந்து பழம் கொத்தும் கிளி, கடற்கரையில் அலைகளோடு வாழும் எண்ணற்ற சிறு உயிரினங்கள், இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நாம் பெரும்பாலும் இயல்பான காட்சிகளாகவே கடந்து செல்கிறோம். ஆனால், அந்த உலகம் இன்று மெதுவாக மாறிக்கொண்டிருக்கிறது. நாம் அறிந்த சில உயிர்கள் குறைந்து கொண்டிருக்கின்றன; சிலவற்றின் வாழிடங்கள் சுருங்கிக் கொண்டிருக்கின்றன; நேற்று வரை நம் கண்களுக்கு முன்னால் இருந்த ஓர் உயிரினம், நாளை நம் குழந்தைகளின் புத்தகங்களில் மட்டுமே இருக்கக்கூடும். சில ஆண்டுகள் கழித்து, அந்த உயிரினத்தின் பெயரை நம் குழந்தைகளுக்குச் சொல்லும்போது, “இப்படி ஓர் உயிரினம் முன்பு இருந்தது” என்று சொல்ல வேண்டிய நிலை வந்துவிடலாம். இயற்கையில் எந்த உயிரும் தேவையற்றது அல்ல; நமக்குப் பிடிக்காத ஒரு பூச்சியாக இருந்தாலும், பயமுறுத்தும் ஒரு பாம்பாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத அளவுக்குச் சிறிய ஓர் உயிரினமாக இருந்தாலும், அது இயற்கையின் சுழற்சியில் ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. ஓர் உயிரினத்தின் எண்ணிக்கை குறைவது என்பது அந்த உயிரினத்திற்கான பிரச்னை மட்டுமல்ல; அதைச் சார்ந்து வாழும் மற்ற உயிர்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனால், மனிதனின் வளர்ச்சிப் பயணம் இயற்கையின் மீது அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காடுகள் குறைகின்றன. நீர்நிலைகள் மாறுகின்றன. கடல்கள் மாசடைகின்றன. வனவிலங்குகளின் வாழிடங்கள் சுருங்குகின்றன. காலநிலை மாற்றம் பல உயிரினங்களின் வாழ்வையே மாற்றத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, உலகின் பல பகுதிகளில் உயிரினங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துவருகிறது. இயற்கையின் இந்த மௌனமான மாற்றங்களை அறிவியல் தரவுகளுடன் பதிவுசெய்து, உலகின் கவனத்திற்குக் கொண்டுவரும் முக்கியமான அமைப்புதான் IUCN Red List of Threatened Species. 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பட்டியல், இன்று உலகின் பல்லுயிர் பெருக்கத்தின் நிலையை அறிய உதவும் மிக முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது. அதாவது, மதிப்பிடப்பட்ட உயிரினங்களில் சுமார் 28 சதவீதம் அழிவின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. இந்த எண்ணிக்கையை ஒரு புள்ளிவிவரமாக மட்டும் பார்க்க முடியாது. ஒவ்வோர் எண்ணுக்குப் பின்னாலும் ஓர் உயிர் இருக்கிறது; ஒரு வாழிடம் இருக்கிறது; ஓர் இயற்கை உறவு இருக்கிறது. ஓர் உயிரினம் அழிவது என்பது இயற்கையின் ஒரு பக்கம் கிழிக்கப்படுவது போன்றது. அந்தப் பக்கத்தை மீண்டும் எழுத முடியாது. IUCN – International Union for Conservation of Nature என்பது இயற்கைப் பாதுகாப்புக்காக உலக அளவில் செயல்படும் அமைப்பாகும். இந்த அமைப்பு உருவாக்கிய IUCN Red List of Threatened Species, உலகின் விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூஞ்சை இனங்களின் பாதுகாப்பு நிலையை மதிப்பிடுகிறது. ஓர் ஒரு உயிரினம் அழியும் அபாயத்தில் இருக்கிறதா என்பதை மட்டும் இந்தப் பட்டியல் கூறுவதில்லை. அந்த உயிரினம் எங்கு வாழ்கிறது, அதன் எண்ணிக்கை எவ்வளவு, அதன் வாழிடம் எவ்வாறு மாறியுள்ளது, அதற்கு என்னென்ன அச்சுறுத்தல்கள் உள்ளன, மனிதர்களால் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, அதைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன போன்ற பல தகவல்களையும் பதிவு செய்கிறது. IUCN தரவுகளின் அனைத்து உயிரினங்களும் ஒரே அளவில் பாதிக்கப்படவில்லை. சில உயிரினக் குழுக்கள் அழிவதற்கான அபாயம் மிகவும் அதிகமாக உள்ளது. Reef-building corals – பவளப்பாறைகளை உருவாக்கும் பவள இனங்களில் 44% அழியும் அபாயத்தில் உள்ளன. கடலுக்குள் இருக்கும் இந்தச் சிறிய உயிரினங்கள் உருவாக்கும் பவளப்பாறைகள், ஏராளமான கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழிடமாக உள்ளன. Amphibians – இருவாழ்விகளில் 41% அழியும் அபாயத்தில் உள்ளன. தவளைகள், தேரைகள் போன்றவை நீர் மற்றும் நிலம் என இரு சூழல்களுடனும் தொடர்புடையவை. அவற்றின் எண்ணிக்கை குறைவது சுற்றுச்சூழல் மாற்றத்தின் முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது. சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்களில் 38%, மர இனங்களில் 38%, Conifers – ஊசியிலைத் தாவரங்களில் 34% அழியும் அபாயத்தில் உள்ளன. மேலும் Mammals – பாலூட்டிகளில் 26%, நன்னீர் மீன்களில் 26%, ஊர்வனவற்றில் 21%, பறவைகளில் 11.5% என அழியும் அபாயத்தில் இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று சைக்காட்(Cycads) தாவரங்கள் 71% அழியும் அபாயத்தில் உள்ளன. உயிரினங்கள் அழிவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று வாழிட இழப்பு. ஒரு காடு வெட்டப்படும்போது அங்கே இருக்கும் மரங்கள் மட்டும் அழிவதில்லை. அந்த மரங்களில் கூடு கட்டிய பறவைகள், மரத்தைச் சார்ந்து வாழ்ந்த பூச்சிகள், அதன் பழங்களை உண்ட விலங்குகள் என ஒரு பெரிய உயிரியல் உறவு பாதிக்கப்படுகிறது. நீர்நிலைகள் அழிக்கப்படும்போது மீன்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவற்றை உணவாகக் கொண்ட பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். இப்போது காலநிலை மாற்றமும் இந்தப் பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது. வெப்பநிலை உயர்வு, மழைப்பொழிவில் மாற்றம், கடல் வெப்பநிலை அதிகரிப்பு, கடல் அமிலமயமாதல் போன்றவை பல உயிரினங்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்றன. “ஒரு பறவை அழிந்துவிட்டால் என்ன ஆகும்?” என்று நாம் சாதாரணமாகக் கேட்கலாம். ஆனால், அந்தப் பறவை விதைகளைப் பரப்பியிருக்கலாம். சில பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். வேறு ஓர் உயிரினத்திற்கு உணவாக இருந்திருக்கலாம். அதேபோல், நமக்குப் பயமாகத் தோன்றும் ஒரு பாம்பு, எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கலாம். இயற்கையில் ஒவ்வோர் உயிரினமும் மற்றோர் உயிரினத்துடன் ஏதோ ஒரு வகையில் இணைந்திருக்கிறது. இயற்கையைப் பாதுகாப்பது வனத்துறையினரின் அல்லது சுற்றுச்சூழல் அமைப்புகளின் பொறுப்பு மட்டுமே என்று நினைத்துவிடக் கூடாது. நம்முடைய வீட்டு அருகில் ஒரு மரத்தைப் பாதுகாப்பது, பறவைகளுக்கு நீர் வைப்பது, நீர்நிலைகளில் குப்பைகளை வீசாமல் இருப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது, வனவிலங்குகளைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது போன்ற சிறிய செயல்களும் முக்கியமானவை. அதைவிட முக்கியமானது, இயற்கையைப் பற்றிய புரிதலை அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது ஆகும். ஒரு குழந்தை ஒரு பறவையைப் பார்த்து அதன் பெயரை மட்டும் தெரிந்துகொள்வதைவிட, “இந்தப் பறவை வாழ இந்த மரம் தேவை; இந்த மரம் வாழ இந்த மண் தேவை; அந்த மண்ணைப் பாதுகாக்க நாமும் பொறுப்பு” என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். உயிரினங்களைப் பாதுகாப்பது இயற்கைக்கு நாம் செய்யும் உதவி அல்ல. நம்முடைய வாழ்க்கையையும், நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் கடமை. ஓர் உயிரினம் அழிந்தபிறகு அதை நினைத்து வருத்தப்படுவதற்கு முன்பே, அது அழிவதற்கான காரணத்தைத் தடுக்க வேண்டும். நாம் இல்லாமல் இயற்கை வாழ முடியும். ஆனால் இயற்கை இல்லாமல் நம்மால் வாழ முடியாது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை