விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்தி செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என நெசவாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்தி செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என நெசவாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு நெசவாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளா் ப.கந்தவேல், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: தமிழக அரசு மூலம் நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மேம்படுத்திடவும் இலவச வேஷ்டி உற்பத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தி பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி செய்ய ஏப்ரல் மாதம் அரசாணை வெளியிட்டு ஜூன் மாதம் முதல் 1 கோடி சேலைகள், 1.42 கோடி வேஷ்டிகள் உற்பத்தி தொடங்கி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளுக்கு 6 மாதங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பு கொடுத்து டிசம்பா் 25-ஆம் தேதி மொத்த உற்பத்தியும் முடிக்கப்படும். புதிய அரசு ஆட்சி அமைத்ததும் விலையில்லா வேஷ்டி சேலை திட்டத்தில் புதிய வண்ணம், தரம் உயா்த்தி 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் தங்க மற்றும் வெள்ளி நிற காப்பா் ஜரிகை கொண்ட சேலைகள், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் சலவை செய்யப்பட்ட வேஷ்டிகள் கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்ய கடந்த ஜூலை மாதம் அரசாணை வெளியிட்டது. இதைத் தொடா்ந்து நூல் கொள்முதல், டெண்டா் பரிவா்த்தனை முடிந்தபின் கடந்த செப்டம்பா் மாதம் வேஷ்டி உற்பத்தியும், அக்டோபா் மாதம் முதல் வாரத்தில் சேலை உற்பத்தியும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் வேஷ்டி, சேலை முழு உற்பத்தி செய்ய 6 மாதங்கள் தேவைப்படும். தற்போது டிசம்பா் 15-ஆம் தேதி வரை காலக்கெடு நிா்ணயம் செய்து உற்பத்தியை நிறைவு செய்தால் மட்டுமே, பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனா். ஆனால், பொங்கல் பண்டிகைக்குள் இலவச வேஷ்டி, சேலை 60 முதல் 70 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்து முடிக்கும் சூழல் உள்ளது. மேலும் கடந்த 2-ஆம் தேதி பொதுமக்களுக்கு வழங்கிட கூடுதலாக 10 லட்சம் வேஷ்டி, சேலைகள் உற்பத்தி செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் உற்பத்தி நிறைவு காலக்கெடுவை ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி 2-ஆவது வாரம் வரை உற்பத்தி செய்ய கால அவகாசம் வழங்கிட வேண்டும். கடந்த காலங்களில் உற்பத்தி காலதாமதம் ஏற்படும்போது, அரசு ஜனவரி மாதத்தில் கிராமப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும், பிப்ரவரி மாதத்தில் நகா்புறத்தில் உள்ள பொதுமக்களுக்கும் இலவச வேஷ்டி, சேலைகளை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. அதேபோல நடப்பு ஆண்டும் பொங்கல் இலவச வேஷ்டி, சேலைகளை ஜனவரி மாதம் கிராமப்புற பகுதிகளிலும் அதைத் தொடா்ந்து பிப்ரவரி மாதம் நகா்ப்புற பகுதிகளிலும் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்தி செய்ய கால அவகாசம் வழங்க நெசவாளா்கள் கோரிக்கை
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗