இந்திய இளைஞர்களில் இதய நோய் அதிகரிப்புக்கு வாழ்க்கை முறை காரணிகள் முக்கியம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. வாரத்திற்கு 150 நிமிடம் நடை/உடற்பயிற்சி, குறைந்த கொழுப்பு–உப்பு உணவு, புகை–மதுவைத் தவிர்த்தல், மன அழுத்தக் கட்டுப்பாடு, 40 வயதுக்கு முன்பே இதய பரிசோதனை செய்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாரடைப்பு ஆபத்தை குறைக்க உதவும். புகையிலை பயன்பாடு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், உடல்பருமன், தீவிர மன அழுத்தம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்றவை மாரடைப்புக்கான முதன்மை காரணிகளாக அமைகின்றன. மரபியல்ரீதியாகவும், வயது அதிகரிக்கும்போதும் இந்த ஆபத்து மேலும் அதிகரிக்கிறது. மேல்நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் இதய நோய் பாதிப்பு மிக இளமையிலேயே தொடங்குகிறது. இந்தியாவில் ஏற்படும் மாரடைப்பு மரணங்களில் சுமார் 30 சதவீதம் 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கே ஏற்படுவதாக ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கின்றன. மாரடைப்பு என்றால் வெறும் மார்பு வலி மட்டுமே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. மார்பில் கடுமையான வலி அல்லது அழுத்தம் ஏற்படுவது, இடது கை, தாடை, கழுத்து, முதுகு அல்லது மேல் வயிற்றில் வலி பரவுவது, திடீர் மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். அதேநேரம், ஆண்களைவிட பெண்களுக்கு அறிகுறிகள் சற்று மாறுபடலாம். நெஞ்செரிச்சல், சீரற்ற செரிமானம், காரணம் இல்லாத தீவிர சோர்வு, வாந்தி மற்றும் திடீரென குளிர்ந்த வியர்வை வெளியேறுவது போன்ற மாறுபட்ட அறிகுறிகளும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். பெண்களுக்கு இத்தகைய அறிகுறிகள் மன அழுத்தம் எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதால், சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மாரடைப்பு வராமல் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அவசியம். வாரத்துக்கு 150 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது, கொழுப்பு மற்றும் உப்பு குறைந்த உணவுப் பழக்கம், புகை மற்றும் மதுப்பழக்கத்தைத் தவிர்ப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது ஆகியவை இதய ஆரோக்கியத்தை உறுதி செய்யும். 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கும், இதய நோய் ஆபத்து அதிகம் உள்ளவர்களுக்கும் முறையான மருத்துவப் பரிசோதனைகளைக் கட்டாயமாக்குவது, மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க உதவும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இளைஞர்களைத் தாக்கும் மாரடைப்பு; தப்பிப்பது எப்படி?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk