விஜயின் அரசியல் வெற்றிக்குப் பிறகு, அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடையே தீவிரமடைந்துள்ளது. உளுந்தூர்பேட்டையில் முதலில் புதிய கட்சியை தொடங்கிய அஜித் ரசிகர்கள், தற்போது குன்றத்தூரில் 2வதாக புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு நடிகர் கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்துள்ளது இந்திய அரசியலை உலுக்கியுள்ளது. விஜய் கட்சி தொடங்கும் முன்னர் அவரும் அஜித்தும்தான் தமிழக திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்தனர். இதன் காரணமாக விஜயின் வழியை பின்பற்றி நடிகர் அஜித்தும் அரசியல் கட்சியை தொடங்க வேண்டும் என அவரின் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அரசியலில் விருப்பம் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார் அஜித். இதற்கிடையே அவரும் விஜயும் ஒன்று சேர்ந்து லண்டனில் கார் ரேஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அரசியலில் பெரும் விவாதமாகியது. இதனால் அஜித் இனி அரசியலுக்கு வரமாட்டார் என்றே அவரது ரசிகர்களால் பார்க்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டையில் ஒன்றுகூடிய அஜித் ரசிகர்கள் சிலர், ’தமிழக மக்கள் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியதாக அறிவித்தனர். மேலும் கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்து, கட்சியின் ‘மாநிலப் பொதுச்செயலாளர்’ பதவியை அஜித்துக்காகக் காலியாக வைத்துள்ளதாகவும் அவர் அரசியலுக்கு வந்தால் இக்கட்சி அவருக்குச் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் ஒன்று கூடிய அஜித் ரசிகர்கள் அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். இந்த நிகழ்வில் நாளைய முதல்வரே பதவியேற்க வா உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் அஜித் புகைப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்து "நாளை முதல்வர் அஜித்" என கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். பின்னர் கட்சியின் கொடி, சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டு, கட்சி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. அஜித் ரசிகர்களின் இதுபோன்ற செயல்களால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
விஜய்க்கு போட்டியாக அஜித் ? அரசியலில் நுழைந்த ரசிகர்கள்.. புதிய அரசியல் கட்சிகள் தொடக்கம் !
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk