பட மூலாதாரம், Getty Images உங்களுக்கு பசியாக இருக்கிறது. அல்லது பசி இல்லை. அதைப் பற்றி கவலையில்லை. நீங்கள் ஃபுட் நெவர் கம்ஸ் இணையதளத்தைத் திறந்து, 22 வகையான உணவு வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஸ்க்ரோல் செய்யத் தொடங்குகிறீர்கள். பட்டர் சிக்கன் நன்றாகத் தெரிகிறது. அதேபோல் கொரியாவின் பிபிம்பாபும். சில உணவுகளைத் தேர்வு செய்கிறீர்கள். மொத்தத் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பின்னர் பணம் செலுத்தும் பகுதிக்குச் செல்கிறீர்கள். ஒரு டிராக்கரில் உணவு டெலிவரி செய்யும் நபர் உங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதாகக் காட்டப்படுகிறது. அப்போது அந்த இணையதளத்துக்குள்ளிருந்தே ஒரு ஏ.ஐ உருவாக்கிய போலி தொலைபேசி அழைப்பு வருகிறது. உங்கள் கட்டடத்துக்கு வெளியே இருப்பதாகவும், ஆனால் உங்கள் தெருவையோ வீட்டின் வாசலையோ கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அந்த நபர் கூறுகிறார். ஆனால், உண்மையில் அங்கே உணவு என்ற ஒன்றே இல்லை. அந்த ஆர்டர் திரையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. "உணவை ஆர்டர் செய்யுங்கள். பில் செலுத்துவதைத் தவிருங்கள்" என்று அந்த இணையதளம் கூறுகிறது. அதன் வாசகமும் இன்னும் நேரடியாக இருக்கிறது: "உணவு ஒருபோதும் வராது - ஆனால் டோபமைன் வரும்." இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரைச் சேர்ந்த 26 வயதான மென்பொருள் உருவாக்குநர்களான பூர்வன்ஷ் பர்மார் மற்றும் அன்ஷுல் சர்மா ஆகிய இருவரால் ஃபுட் நெவர் கம்ஸ் உருவாக்கப்பட்டது. ஜூன் மாதம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த இணையதளத்தைப் பார்வையிட்டுள்ளதாக ஃபுட் நெவர் கம்ஸ் கூறுகிறது. தற்போது இந்த இணையதளத்தில் 22 சமையலறைகள், 327 உணவு வகைகள் மற்றும் உண்மையான 319 சமையல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் போலியான விலைகள், உருவகப்படுத்தப்பட்ட பணம் செலுத்தும் வசதி மற்றும் கற்பனையான உணவு டெலிவரி அனுபவமும் வழங்கப்படுகிறது. End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம், Purvansh Parmar பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு ஃபுட் நெவர் கம்ஸ், "டோபமைன் தளங்கள்" எனப்படும் புதிய வகை இணையதளங்களின் ஒரு பகுதியாகும். இவை எதையும் உண்மையில் வாங்காமல் அல்லது பயன்படுத்தாமல், பொருட்களை வாங்குவது போன்ற அனுபவத்தை மட்டும் உருவாக்குகின்றன. போலியான ஷாப்பிங் தளங்கள், போலியான டெலிவரி சேவைகள், ஏன் போலியான விடுமுறை அனுபவங்கள்கூட இதில் உள்ளன. இந்த வகை இணையதளங்கள் தென் கொரியாவில் பிரபலமடையத் தொடங்கின. பின்னர் பல்வேறு நாடுகளுக்கும் பரவி, இதுபோன்ற தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உதாரணமாக, டோபமைன் ஷாப் மற்றும் ஃபேக்ஹால் போன்ற தளங்கள் உணவு டெலிவரி, ஷாப்பிங் முதல் பயணம் வரை பல்வேறு அனுபவங்களைப் போலியாக உருவாக்குகின்றன. ஃபுட் நெவர் கம்ஸ் நிறுவனர்களின் சொந்த ஷாப்பிங் பழக்கங்களில் இருந்தே இந்த யோசனை உருவானது. பர்மாரும் சர்மாவும் கணினி அறிவியல் டிப்ளமோ படிப்பில் சந்தித்தனர். பின்னர், மென்பொருள் மற்றும் ஏ.ஐ தயாரிப்புகளை உருவாக்குவதுடன், இன்ஸ்டாகிராம் உள்ளடக்கங்களையும் உருவாக்கும் நியூரோஎக்ஸ் ஏ.ஐ நிறுவனத்தைத் தொடங்கினர். தங்கள் சொந்த வாழ்க்கையிலேயே இந்தப் பழக்கத்தை அவர்கள் கவனித்தனர். இணையதளங்களில் தங்களுக்குப் பிடித்த பொருட்களை கார்ட்டில் சேர்த்துவிட்டு, அவற்றை வாங்காமல் அப்படியே விட்டுவிடுவது அவர்களுக்குப் பழக்கமாக இருந்தது. சர்மா எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இணையத்தில் பார்த்து, அவற்றை ஆன்லைன் கார்ட்டில் சேர்த்துவிட்டு, பின்னர் வாங்காமல் விட்டுவிடுவார். பர்மாரின் தாயாரும் இதேபோன்ற பழக்கத்தைக் கொண்டிருந்தார். "அவர் பொருட்களை கார்ட்டில் சேர்த்துவிட்டு, 'இதைப் பிறகு ஆர்டர் செய்கிறேன்' என்பார்" என்று பர்மார் நினைவுகூருகிறார். பர்மாரைப் பொறுத்தவரை, இந்தப் பழக்கம் உணவு டெலிவரி ஆர்டர் செய்யும் நிலை வரை சென்றது. மும்பையில் இரண்டு மாதங்கள் ஒரு ப்ராஜெக்டில் பணியாற்றியபோது, வாரத்திற்கு ₹5,000 முதல் ₹10,000 வரை உணவுக்காகச் செலவிட்டதாக அவர் கூறுகிறார். சில நேரங்களில் தனக்குத் தேவையில்லாத உணவுகளைக்கூட அவர் ஆர்டர் செய்துள்ளார். பெல்ஜியன் வாஃபிள்ஸ், ஐஸ்க்ரீம் ஆகியவற்றுடன், ஒருமுறை தனக்கு அதிகம் விருப்பமில்லாத ஒரு பெரிய ஜாடி புளிப்பு கிரீமையும் ஆர்டர் செய்துள்ளார். அதை அவர் நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டார். "ஒருவேளை, எனக்குத் தேவையாக இருந்தது எப்போதும் உணவு அல்ல; அதை ஆர்டர் செய்யும் செயல்முறையே எனது உண்மையான விருப்பமாக இருந்திருக்கலாம்" என்று அவர் கருதுகிறார். பட மூலாதாரம், Purvansh Parmar இருவரின் கருத்துப்படி, உண்மையான பசியுடன் தொடங்கும் இந்தப் பழக்கம், உணவை ஆர்டர் செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியுடன் தொடர்புடையதாக மாறிவிடலாம். காலப்போக்கில், பசி இல்லாத நேரத்தில்கூட சலிப்பு, பதற்றம் அல்லது பழக்கம் ஆகியவை உணவை ஆர்டர் செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தலாம். "சில நேரங்களில் உங்களுக்கு சுத்தமாகப் பசியே இருக்காது. நீங்கள் சலிப்பாகவோ, வேலையில் மும்முரமாகவோ இருப்பீர்கள். அப்போது உணவை ஆர்டர் செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதை உணர்வீர்கள். அந்த உணவை ஆர்டர் செய்யும் செயலுடன் டோபமைன் கிடைக்கும் உணர்வைத் தொடர்புபடுத்தத் தொடங்குவீர்கள். இறுதியில், நீங்கள் விரும்புவது உணவு மட்டுமல்ல" என்கிறார் பர்மார். யேல் வாடிக்கையாளர் நுண்ணறிவு மையத்தின் இயக்குநர் ரவி தர், இதை "முன்கூட்டியே கிடைக்கும் திருப்தி" என்கிறார். அதாவது, எதையாவது பயன்படுத்த அல்லது அனுபவிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பிலேயே கிடைக்கும் மகிழ்ச்சி. புதிய ஜோடி காலணிகள், ஒரு விடுமுறைப் பயணம், உணவகத்தில் சாப்பிடுவது போன்ற கற்பனையைத் தூண்டும் விஷயங்களில் இந்த உணர்வு குறிப்பாக வலுவாக இருக்கும். ஏனெனில், அந்த அனுபவத்தின் ஒரு பகுதியாகவே அதை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் மாறிவிடுகிறது. சில நேரங்களில், ஒன்றை சொந்தமாக்குவதைவிட அதை எதிர்பார்த்துக் காத்திருப்பதே அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடும் என்கிறார் தர். "தேடுவதில்தான் பரபரப்பு இருக்கிறது." ஒருமுறை அந்தப் பொருள் கிடைத்துவிட்டதும், அதற்காக இருந்த எதிர்பார்ப்பும் பதற்றமும் முடிவுக்கு வந்துவிடுவதால், உளவியல் ரீதியான தூண்டுதல் குறைந்துவிடுகிறது. இந்தத் தேடலுக்கும் கிடைப்பதற்கும் இடையிலான வேறுபாட்டுக்கு நரம்பியல் அறிவியலில் ஒரு விளக்கம் உள்ளது. இது டோபமைன் குறித்த பிரபலமான ஒரு கருத்தை மேலும் சிக்கலாக்குகிறது. இணையத்தில் பரவலாகப் பேசப்படும் "டோபமைன் ஹிட்" என்ற கருத்து சொல்வதைப் போல, டோபமைன் என்பது மூளையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ரசாயனம் மட்டுமல்ல. பட மூலாதாரம், NurPhoto via Getty Images "விரும்புதல்", "விருப்பம்/மகிழ்ச்சி" ஆகிய கோட்பாட்டை உருவாக்கிய மிச்சிகன் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி கென்ட் பெரிட்ஜ், இவை இரண்டும் தனித்தனியான செயல்முறை என்கிறார். ஒரு விஷயத்தை நோக்கி நம்மை உந்திச் செல்ல வைப்பது "விரும்புதல்"; அதை பெற்ற பிறகு அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி "விருப்பம்". இவை பெரும்பாலும் ஒன்றாகவே நிகழ்கின்றன. ஆனால், எல்லா நேரங்களிலும் அப்படி இருப்பதில்லை. பெரிட்ஜின் விளக்கப்படி, முதல் செயல்முறையைத் தூண்டுவது டோபமைன்; இரண்டாவதை அல்ல. இணையத்தில் கண்ணைக் கவரும் உணவுகள் அல்லது பொருட்கள், பெரிட்ஜ் "ஊக்க முக்கியத்துவம்" என்று அழைக்கும் இந்த "விரும்புதல்" அமைப்பைத் தூண்டக்கூடும். "சில சூழ்நிலைகள் 'விரும்புதல்' உணர்வை மட்டுமே தூண்டக்கூடும்" என்கிறார் அவர். இறுதியில் கிடைக்கும் மகிழ்ச்சி குறைவாக இருந்தாலும்கூட, நாம் ஒன்றை நோக்கி தீவிரமாகச் செல்லக்கூடும். அல்லது, அன்றாட வழக்கத்தில் சொல்வதானால், ஒரு விஷயத்தைப் பெற விரும்புவது, அதை உண்மையில் பெற்ற பிறகு அதைப் பிடித்திருப்பதைவிட அதிகமாக இருக்கலாம். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் போதைப் பழக்க மருத்துவ நிபுணரும், டோபமின் நேஷன் என்ற நூலின் ஆசிரியருமான அன்னா லெம்ப்கேயும் இதேபோன்ற வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார். "டோபமைனை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ரசாயனம் என்று அழைப்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கம். 'இதை இன்னும் அதிகமாகப் பெற வேண்டும்' அல்லது 'இதை இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும்' என்று தூண்டுவதுதான் டோபமைனின் செயல்பாடு. ஆனால், அது மகிழ்ச்சியுடன் நேரடியாகச் சமமானது அல்ல" என்று அவர் கூறினார். அன்னா லெம்ப்கே கூறுவதில் மற்றொரு முக்கிய அம்சம், சடங்குபோன்ற பழக்கத்தின் பங்கு. ஒரு குறிப்பிட்ட பலனைப் பெறுவதுடன் தொடர்புடைய அறிகுறிகளும் பழக்கங்களும் தனித்துவமாகவே நம்மைத் தொடர்ந்து அந்தச் செயல்பாட்டைச் செய்யத் தூண்டக்கூடும் என்கிறார் அவர். போதைப் பழக்கத்தில், போதைப் பொருளைப் பயன்படுத்துவதற்கு முன்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் செயல்முறைகள்கூட, நாளடைவில் அந்தப் போதைப் பொருளைப் போலவே முக்கியத்துவம் பெறலாம். "ஒரு பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே, அந்தப் பலன் கிடைப்பதைப் போலவே நம்மைத் தொடர்ந்து செயல்படத் தூண்டக்கூடும்" என்கிறார் அவர். அப்படியானால், கற்பனையான உணவை மீண்டும் மீண்டும் ஆர்டர் செய்வது உண்மையான பசியையோ, விருப்பத்தையோ தீர்க்குமா? பெரிட்ஜின் கருத்துப்படி, இந்தச் சடங்குபோன்ற செயல்முறை "டோபமைன் ஹிட்டையும் வலுவான 'விரும்புதல்' உணர்வையும் ஏற்படுத்தலாம். அதேசமயம், பழக்கத்தின் காரணமாக உருவாகும் மெல்லிய 'விருப்பம்' என்ற உணர்வையும் தூண்டலாம்." ஆனால், இந்தப் புதுமையான அனுபவத்தின் மீதான ஆர்வம் "விரைவிலேயே குறைந்துவிடும்" என்று அவர் எதிர்பார்க்கிறார். மேலும், 10-க்கும் மேற்பட்ட கற்பனை ஆர்டர்களைச் செய்யும் அளவுக்கு பலர் மீண்டும் இந்தத் தளத்துக்குத் திரும்புவார்கள் என்றால் அது தனக்கு "ஆச்சரியமாக இருக்கும்" என்கிறார். எனினும், உருவகப்படுத்தப்பட்ட நுகர்வு ஒருவிதமான மன அழுத்த வெளியேற்றும் வழியாகச் செயல்படக்கூடும் என்ற சாத்தியத்தை ரவி தர் ஏற்றுக்கொள்கிறார். "உருவகப்படுத்தப்பட்ட ஷாப்பிங் ஒரு நுகர்வோரின் வாங்க வேண்டும் என்ற தூண்டுதலைத் திருப்திப்படுத்துமா என்பதை அறிய இன்னும் கூடுதல் ஆய்வுத் தரவுகள் தேவை. ஆனால், கேமிங்கில் உருவகப்படுத்தப்பட்ட நுகர்வு தொடர்பான ஆய்வுகள், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன" என்கிறார் அவர். பட மூலாதாரம், AFP via Getty Images ஆனால், இதற்கு இணையாக மற்றொரு சாத்தியமான ஆபத்தும் உள்ளது: மாற்ற வேண்டிய நடத்தையைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, அந்தச் சடங்குபோன்ற செயல்முறையே அதே நடத்தையை மீண்டும் மீண்டும் பழக்கமாக்கிவிடலாம். இதற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும், அதன் விளைவு ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம் என்றும் லெம்ப்கே கூறுகிறார். ஆனால், காலப்போக்கில் இந்தத் தளங்கள் "அவை உருவகப்படுத்த முயற்சிக்கும் அதே போதைத் தன்மை கொண்ட நரம்பியல் வலைப்பின்னல்களை வலுப்படுத்தக்கூடும்" என்பதே தனது கணிப்பு என்கிறார். "இருப்பினும், இதில் ஒரு சாதகமான அம்சம் இருக்கிறது. இந்தத் தளங்களைப் பயன்படுத்துபவர்கள், தங்களுக்கு ஒரு பிரச்னை இருப்பதை ஓரளவுக்காவது ஏற்கெனவே உணர்ந்திருக்கிறார்கள். அந்தப் பிரச்னையை ஒப்புக்கொள்வது பெரும்பாலும் அதிலிருந்து மீள்வதற்கான முதல் படியாக இருக்கும்" என்கிறார் லெம்ப்கே. சர்மாவும் எதிர்பாராத வகையில் இதுதொடர்பான ஒரு பரிசோதனையைத் தானாகவே மேற்கொண்டார். அவரது தொலைபேசியின் திரையில் விரிசல் ஏற்பட்டபோது, அதற்குப் பதிலாக புதிய தொலைபேசி வாங்குவதற்காக அமேசானில் ஒரு வாரம் செலவிட்டார். ஆறு அல்லது ஏழு தொலைபேசிகளை ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றை தனது கார்ட்டில் சேர்த்தார். பின்னர், தனது பழைய தொலைபேசியின் திரையைப் பழுதுபார்த்துக்கொண்டார். "தொலைபேசிகளைப் பற்றி ஆராய்ந்து, அவற்றைக் கார்ட்டில் சேர்க்கும் செயல்முறையை நான் ரசித்தேன். ஆனால், இறுதியில் நான் எந்தத் தொலைபேசியையும் வாங்கவில்லை" என்கிறார் அவர். இப்போது உணவு டெலிவரி தளங்களிலும் இதேபோன்ற செயலைச் செய்வதை அவர் கவனிக்கிறார். குறிப்பாக, பதற்றமாக இருக்கும்போது, உணவுகளை கார்ட்டில் சேர்த்துக்கொண்டே இருப்பார்; ஆனால் ஆர்டரைச் செய்து முடிக்க மாட்டார். "இந்தப் பிரச்னை எனக்கும் இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன்" என்கிறார் அவர். இந்த இணையதளத்தின் வலைப்பதிவு, போலியான உணவு டெலிவரி தளத்தின் "தீவிரமான பக்கத்தை" ஆராய்கிறது. உணவு டெலிவரிக்கு அடிமையாவது, போலியாக உணவை ஆர்டர் செய்வது ஏன் மகிழ்ச்சியைத் தருகிறது, உணவின் மீதான ஏக்கம், குற்ற உணர்வு, ஷாப்பிங் கார்ட்டின் உளவியல் என பல்வேறு விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, நிறுவனர்கள் இந்த யோசனையை உணவைத் தாண்டியும் விரிவுபடுத்தியுள்ளனர். அவர்களின் இரண்டாவது தளமான ட்ரிப் நெவர் லீவ்ஸ் மூலம் பயனர்கள் ஒரு விடுமுறைப் பயணத்தைத் திட்டமிடலாம். செல்லும் இடம், விமானம், இருக்கை, ஹோட்டல், செய்யவிருக்கும் நடவடிக்கைகள் என அனைத்தையும் தேர்வு செய்யலாம். பின்னர், ஓடுபாதையைவிட்டு ஒருபோதும் புறப்படாத ஒரு விமானத்தில் அவர்கள் மெய்நிகர் பயணம் மேற்கொள்வார்கள். இந்தத் தளத்தை இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதாக நிறுவனர்கள் கூறுகின்றனர். இந்தத் தளங்களைப் பயன்படுத்துபவர்கள் யார் என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது சற்று கடினம். ஆனால், இளம் வயதினர் இதுபோன்ற டிஜிட்டல் வெகுமதிகளுக்கு அதிகமாகப் பழக்கமாகிவிடும் வாய்ப்பு இருக்கலாம் என்கிறார் லெம்ப்கே. ஏனெனில், "வளர்ச்சியடைந்து வரும் மூளை அதிகம் பாதிக்கப்படக்கூடியது" என்கிறார் அவர். தற்போதைக்கு, இந்தத் தளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது தங்கள் நோக்கம் அல்ல என்கிறார்கள் நிறுவனர்கள். இவற்றை இலவசமாகவே தொடர்ந்து வழங்கவும், எதிர்காலத்தில் சேகரிக்கப்படும் தரவுகளை நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் உளவியல் நிபுணர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதிகமாக உணவை ஆர்டர் செய்வது குறித்த ஒரு நகைச்சுவையாகத் தொடங்கிய இந்த முயற்சி, நவீன நுகர்வு குறித்து இன்னும் பெரிய கேள்வியை எழுப்புகிறது: நாம் விரும்பும் ஒரு பொருளைப் பெறுவதற்கு முன்பே அதன் மீதான உற்சாகத்தின் பெரும்பகுதி கிடைத்துவிடுகிறது என்றால், அந்தப் பொருள் நமக்கு உண்மையில் தேவையா? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
'ஆர்டர் செய்யலாம், பொருள் வராது' - திரில்லுக்காக இந்தியர்களிடையே உருவாகும் புதிய ஷாப்பிங் போக்கு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk